புதுமை புகுத்து 27: தாவரவியலில் சமூகநீதி நிலைநாட்ட விஞ்ஞானிகள் எடுத்த முயற்சி

By த.வி.வெங்கடேஸ்வரன்

இரு வாரங்களுக்கு முன்பு, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்-ல் சர்வதேச தாவரவியல் மாநாடு நடைபெற்றது. இதில் 218 தாவரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் தாவரவியலில் சமூக நீதி காண முடிவெடுக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் இந்த மாநாட்டில் பங்கேற்ற 556 தாவரவியலாளர்களில் 63 சதவீதம் பேர் இந்த மாற்றத்தை அங்கீகரித்து வாக்களித்தனர். இதன் தொடர்ச்சியாக, எடுத்துக்காட்டாக தென்னாப்பிரிக்காவில் பூக்கும் தாவரமான கிபிபோஸ்சிலின் அறிவியல் பெயர் க்னிடியா காஃப்ரா (Gnidia caffra) என்பதிலிருந்து க்னிடியா அஃப்ரா (Gnidiaaffra) என மாற்றப்படும். 2026-ல் இது அமலுக்கு வரும். இதேபோல எரித்ரினா காஃப்ரா எனும் தாவரம் எரித்ரினா அஃப்ரா என பெயர் மாற்றம் அடையும்.

செடிகளுக்குள் பாகுபாடா? - தென்னாப்பிரிக்காவில் நிற வெறி ஆட்சி நடைபெற்றபோது கறுப்பின மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட ‘காஃப்ரா' எனும் சொல் இழி சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இழி சொல்லை நீக்கி ஆப்பிரிக்காவில் தோற்றம் கொண்டவை எனும் பொருள்தரும் ‘அஃப்ரா' எனும் பெயர் தற்போது சூட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா பல்கலைக்கழகத்தில் (NMU) தாவர வகைபிரித்தல் நிபுணர்களான கிடியோன் ஸ்மித், எஸ்ட்ரெலா ஃபிகியூரிடோ ஆகியோர் பல ஆண்டுகளாக பெயர் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த மாநாட்டில் பெயர் மாற்றம் பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது.

ஹிட்லர் வண்டு! - கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் தாவர வகைபிரித்தல் நிபுணர் கெவின் தியேல் முன்மொழிந்த இரண்டாவது மாற்றம் குறித்த தீர்மானம் பகுதியளவில் ஏற்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களை சிறை பிடித்து அமெரிக்காவில் அடிமைகளாக விற்று செல்வந்தரான ஜார்ஜ் ஹிபர்ட் எனும் காலனிய வியாபாரி பெயரில் பல தாவரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதுபோன்ற வெறுக்கத்தக்க நபர்களின் பெயர்களை தாவர பெயர்களிலிருந்து நீக்க வேண்டும் என கெவின் தியேல் முன்மொழிந்தார்.

எது ஏற்புடையது; எது வெறுக்கத்தக்கது எனும் விவாதம் முடிவில்லாமல் நீளும் எனக் கூறி சமரசமாக குழு ஒன்றை சர்வதேச தாவரவியல் காங்கிரஸ் நியமித்துள்ளது. எந்த பிரிவினரையும் இழிவுபடுத்தாத வகையில் உள்ள பெயர்களை மட்டும் 2026-ல் சூட்டி சமூகநீதியை உறுதிபடுத்த இந்த கமிட்டி பொறுப்பேற்றுள்ளது.

தாவரங்கள், பூஞ்சை, பாசிகளின் பெயரிடல் தொடர்பான அதிகாரம் சர்வதேச தாவரவியல் காங்கிரஸிடம் உள்ளது. அதுபோல விலங்குகளுக்கு பெயரிடல் குறித்த அதிகாரம் விலங்கியல் பெயரிடல் சர்வதேச ஆணையத்திடம் உள்ளது.

இந்நிலையில், அனோஃப்: தால்மஸ் ஹிட்லரி எனும் வண்டு, ஹைபோப்டா முசோலினி எனும் பட்டாம்பூச்சி என ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் பெயர் கொண்ட உயிரினங்களுக்கும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் சர்வதேச ஆணையத்தில் ஒலித்தாலும் ஏற்க தயக்கம் காட்டுகின்றனர்.

பெயர் மாற்றம் ஆய்வு சூழலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அச்சம் கொள்கின்றனர். காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளின் பூர்வக்குடிகளை இழிவு செய்யும் விதத்தில் பல பறவைகள், விலங்குகளுக்கு பெயர்கள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும் என்ற குரல் ஆய்வுலகில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி. தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE