ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் யானைக்கு நாம் ராமலக்ஷ்மி என்று பெயர் சூட்டியுள்ளோம். இது நாம் வைத்த பெயர். சக யானைகள் இந்த யானையை எந்தப் பெயர் வைத்துக் கூப்பிடுகின்றன?
ஆம்! நம்மைப் போலேவே யானைகள் ஒன்றுக்கொன்று பெயர் வைத்துக் கூப்பிடுகின்றன. நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் ’வாழும் சூழல் சார்ந்து உயிரிகளின் நடத்தை பண்பு’ ஆய்வாளர் மைக்கேல் பார்டோ இதனை கண்டுபிடித்துள்ளார்.
தெற்கு கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய பூங்காவிலும், பஃபலோ ஸ்பிரிங்ஸ் மற்றும் சம்புறு வன காப்பகங்களிலும் வாழும் பெண் யானைகளின் பிளிறுகளை 1986 முதல் 2022 வரை பார்டோவின் குழுவினர் ஆய்வு செய்தனர். குறிப்பாக இரண்டு யானைகள் சந்திக்கும்போது ஒன்றுடன் ஒன்று பரிமாறிக்கொள்ளும் சந்திப்பு
பிளிறுகளை பதிவு செய்தனர். யானை கூட்டத்தை நோக்கி வரும் யானை பிளிறும்போது எந்த யானை முன் செல்கிறது என்பதை கவனித்தனர். பதிவு செய்த 625 பிளிறுகளை செயற்கை நுண்ணறிவு கொண்டு பகுப்பாய்வு செய்தனர். மனிதர்களைப்போல யானைகளும் குறிப்பிட்ட யானையை விளித்து அதற்கு செய்தியைக் கூறுகின்றன என இந்த பகுப்பாய்வு சுட்டியது.
‘மிமிக்ரி’ செய்யும் விலங்குகள்: முந்தைய ஆய்வில் போத்தல் மூக்கு ஓங்கில் எனும் டால்பின்கள் (Tursiops truncatus), விசில் அடிப்பதுபோல் ஒலி எழுப்பி ஒன்றை ஒன்று பெயர் வைத்து அழைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான விசில் அடிப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட டால்பினை அழைக்க அதன் தனித்துவமான அழைப்பு விசில் ஒலியை மற்ற டால்பின்கள் பாசாங்கு செய்து ஒலிக்கும்.
அதாவது நீங்கள் எனது குரல்போல மிமிக்கிரி செய்து என்னை விளிக்க முற்படுவதற்கு சமம். இதேபோலதான் யூப்சிட்டுலா கானிகுலரிஸ் எனும் கிளிகளும் மற்ற கிளியின் அடையாள ஒலியை மிமிக்கிரி செய்து அவற்றை அழைக்கிறது. இதன் பொருள் சாக்லேட் மாமா; பட்டு மாமி என சிறு குழந்தைகள் அடையாளம் காட்டுவது போல, மற்ற டால்பின்களும் கிளிகளும் ஒலிக்கும் குரலை மிமிக்கிரி செய்து கவனம் ஈர்க்கின்றன.
ஆனால், நாம் ஒருவருக்கு ஒருவர் இடுகுறி பெயர் (உதாரணத்துக்கு: ராம், ரஹீம், ஆண்டனி) இட்டுக்கொள்கிறோம்; அனைவரும்
அந்த நபரை அதே பெயரில் அழைக்கிறோம். யானைகளின் பெயர் தன்மை என்ன? டால்பின் மற்றும் கிளிகளைப் போல யானையும்ஒலியை மிமிக்கிரி செய்து தான் கவனத்தை பெறுகிறதா? அல்லது மனிதர்களின் இடுகுறிப் பெயர்போல தமக்குள் பெயர் வைத்துக்கொள்கிறதா என ஆய்வு செய்தனர்.
இதோ வந்துட்டேன்! - பார்டோவும் அவரது சகாக்களும் தாம் பதிவு செய்த அழைப்பு ஒலிகளை டேப் ரெகார்டர் மூலம் 17 யானைகள் முன்பு ஒலிக்கச் செய்தனர். பதிவு செய்த ஒலி ஒலிக்கும்போது யானைகளின் நடத்தை மாற்றத்தைக் கண்காணித்தனர்.
பதிவில் தமது 'பெயர்' ஒலிக்கும்போது அந்த யானை சப்தம் வரும் திசையை நோக்கித் துடிப்புடன் ஓடிச் சென்றது. அந்தக் குறிப்பிட்டயானை மட்டும் ஒலியை மேலும் கவனமாகக் கவனித்தது. அதாவது தனது
பெயரை விளித்து ஒலிக்கப்படும் அந்தச் செய்தி தனக்கானது என யானை உணர்ந்து கொள்கிறது என தெரிந்தது.
உதாரணத்துக்கு, அஞ்சலி என்று சிறுமியை, வகுப்பில் ஆசிரியர், சக மாணவ மாணவிகள் எல்லோரும் அஞ்சலி என்று தான் அழைப் பார்கள். ஆனால், தாய் தன் குழந்தையைத் தங்கமே என்றும், தந்தை முத்தே என்றும் செல்லப்பெயர் கொண்டு அழைக்கலாம். இந்த வெவ்வேறு அழைப்புக்களைக் குழந்தை எளிதில் புரிந்துகொள்ளும்.
குறிப்பிட்ட யானையை மற்ற எல்லா யானைகளும் ஒரே 'பெயரில்' அழைக்கின்ற னவா? அல்லது தாய் தந்தை வைக்கும் செல்லப் பெயர்போல ஒவ்வொரு யானையும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறதா எனவும் ஆய்வு செய்து பார்த்தார்கள்.
றுதிப்பட முடிவுக்கு வரமுடியவில்லை என்றாலும் குறிப்பிட்ட யானயை மற்ற எல்லா யானைகளும் ஒரே 'பெயரில்' தான் அழைக்கிறது என ஆய்வு சுட்டுகிறது. இதுவரை மனிதர்களில் மட்டுமே இப்படிப்பட்ட இடுகுறி பெயர் முறை இனம் கண்டுள்ளோம். யானைகளும் இடுகுறி பெயரைப் பயன்படுத்துகின்றன என்பது வியப்பான செய்தி.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி;தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago