வண்டலூர்: வண்டலூர் அருகே கண்டிகை அரசு பள்ளி மாணவிகளின் ரத்த சோகை குறித்த ஆய்வு கட்டுரை குஜராத்தில் நடைபெறும் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அனீமியா எனப்படும் ரத்த சோகை வளரிளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது. ரத்தத்தில் சராசரி ஹீமோகுளோபின் அளவு, 12-15 மி.கி. வரை இருக்க வேண்டும். இதில், 7-க்கு குறைவாக இருந்தால் அதிக ரத்த சோகை எனவும், 7.1-9.9 மி.கி., இருந்தால் சுமாரான ரத்தசோகை எனவும், 10-12 வரை இருந்தால் குறைந்த ரத்த சோகை எனவும் அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைவு, குடற்புழு பாதிப்பு நோய்கள், உணவு பழக்கம் முதலியவை ரத்த சோகை நோய் வருவதற்கு முக்கிய காரணங்கள். ரத்த சோகையினால் உடல் சோர்வு, படிப்பில் மந்தநிலை, தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வளரிளம் பெண்களிடையே ரத்த சோகையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் சுகாதார துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடியில் உள்ள புனித அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், 5 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அந்த கட்டுரைகளில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள கண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் ரத்த சோகை பற்றிய ஆய்வுக்கட்டுரையும் இடம்பெற்றது.
ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஆர்.ஹரிணி, ஜி.காயத்ரி இருவரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சில மாணவிகளை கண்டறிந்து, 10 நாட்கள் தொடர்ந்து முருங்கைக்கீரை சூப், பீட்ரூட் ஜூஸ், பேரீச்சம்பழம், வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை, சிமிலி உருண்டை போன்ற ஹீமோகுளோபின் நிறைந்த சத்தான உணவினை வழங்கி, அவர்களின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை உயர்த்தி ஆய்வினை சமர்ப்பித்தனர்.
இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியை டி. அனுராதா, அறிவியல் ஆசிரியர் சுமதி ஆகியோர் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் காணப்படும் ரத்த சோகையைப் பற்றி செய்த ஆய்வு தேசிய அளவில் நடந்த மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆய்வுகட்டுரையை மாணவிகள் தயாரிப்பதற்கான அனைத்து செலவுகளையும் அறிவியல் ஆசிரியை சுமதி ஏற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: வளரிளம் பெண்கள் பலர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எளிய வகையில் நம்மைச் சுற்றிகிடைக்கக்கூடிய உணவு பொருட்களைக் கொண்டு ரத்த சோகை பாதிப்பை போக்கலாம் என்பதை நாங்கள் கண்டறிந்து, அதனை எங்கள் பள்ளியில் ஹரிணி என்ற மாணவியின் தலைமையில் காயத்ரியை உறுப்பினராக கொண்டு பத்து மாணவர்களை தேர்வு செய்து ஹீமோகுளோபின் நிறைந்த சத்தான உணவை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தொடர்ந்து வழங்கி வந்தோம்.
அதன் அடிப்படையில் தயாரித்த ஆய்வு கட்டுரையை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தோம். முதலில் செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற மாநாட்டில், 55 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தேர்வான 7 ஆய்வு கட்டுரைகளில் எங்கள் ஆய்வுக்கட்டுரையும் ஒன்று.
இதேபோல் மாவட்ட அளவில் தூத்துக்குடியில் நடைபெற்ற, 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 550 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கபட்டதில், 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் எங்கள் ஆய்வு கட்டுரையும் ஒன்று. அடுத்ததாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் எங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளோம். அதிலும் வெற்றி பெறுவோம்.
௭ங்கள் பள்ளியில் ஜங்க்-ஃபுட்வகைகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. மாறாக குழந்தைகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கடலை உருண்டை, எள்ளு உருண்டை, பேரிச்சம்பழம் போன்றவற்றை மட்டுமே மற்ற மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, மாணவர்களும் அதை கடைபிடித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago