கண்ணுக்கு புலப்படாத பழுப்பு காட்டு ஆந்தை: இமயமலையில் இருந்து கோவைக்கு வந்த ஆறுமணி குருவி

By செய்திப்பிரிவு

கோவை: கோவை வனக்கோட்டத்தில் வனத்துறையுடன், தன்னார்வலர்கள் இணைந்து இரண்டு நாட்கள் நடத்திய கணக்கெடுப்பில் அரிய பறவைகள், பட்டாம்பூச்சிகளை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் 7 வனச்சரகங்களில் உள்ள பல்வேறு வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகளை அறிந்துகொள்ள மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமாரின் அறிவுறுத்தலின்படி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோவை நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), டபிள்யு.டபிள்யு.எஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 12,13-ம் தேதிகளில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டன.

உதவிவனப்பாதுகாவலர்கள் சி.தினேஷ்குமார், எம்.செந்தில்குமார், வனச்சரகர்கள் மேற்பார்வையில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இப்பணியில் 82 தன்னார்வலர்கள், வனப்பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் ஈடுபட்டன. கணக்கெடுப்பின்போது 228 வகை பறவைகள், 170 வகை பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, “தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியின்மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பல்லுயிர் பரவல் தெரிய வந்துள்ளது. இத்தகைய கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் தகவல்கள் குறிப்பிட்ட வகை உயிரினங்களை பாதுகாப்பதற்கான திட்டமிடலுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.

பழுப்பு காட்டு ஆந்தை

டிஎன்பிஎஸ் தலைவர் அ.பாவேந்தன், டபிள்யு.டபிள்யு.எஃப் ஒருங்கிணைப் பாளர் பூமிநாதன், சிஎன்எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஜி.பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது: கணக்கெடுப்பின்போது செவ்வலகு செண்பகம் பறவையை குழுவினர் பார்த்துள்ளனர். இது இங்கேயே இருக்கும் பறவை என்றாலும், அதனை பார்ப்பது அரிது. மேலும், வலசை வரும் பறவைகளான ஐரோப்பிய பஞ்சுருட்டான், ஆறுமணி குருவி ஆகியவையும் தென்பட்டன. இதில், ஆறு மணி குருவியானது இமயமலை அடிவாரத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. அங்கு குளிர்காலங்களில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் இரை கிடைப்பது கடினம். எனவே, உணவுக்காக இடம்பெயர்ந்து இங்குவருகிறது. கோடை காலம் தொடங்கி யவுடன் மீண்டும் அங்கேயே சென்று விடும்.

மெடஸ்பிரவுன் பட்டாம் பூச்சி

இதுதவிர, கோவையில் அரிதாக காணப்படும் மலபார் இருவாச்சி பறவை காரமடை வனச்சரகத்திலும், பழுப்பு காட்டு ஆந்தை போளுவாம்பட்டி வனச்சரகத்திலும் தென்பட்டுள்ளன. இதில், பழுப்பு காட்டு ஆந்தையானது உருமறை தோற்றம் கொண்ட பறவை என்பதால், பகலில் அது மரத்தில் அமர்ந்திருந்தாலும் எளிதில் நம் கண்ணுக்கு தெரியாது. இதுதவிர, அரிதாக தென்படும் கருங்காடை, பெருங்கண்ணி உள்ளிட்ட பறவைகளும் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளை பொருத்தவரை கோவை வனக்கோட்டத்தில் முதல்முறையாக ‘மேகுலேட் லேன்ஸர்’ வகைபட்டாம்பூச்சி போளுவாம்பட்டி வனச் சரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE