வீட்டு கழிவுநீரை மறுசுழற்சி செய்வது எப்படி?- அறிவியல் மாநாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் செயல் விளக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்/உதகை

வீடுகளில் வெளியாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து உதகையில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கூடலூர் அரசு பள்ளி மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் திருப்பூர் மாவட்ட மாநாடு, திருப்பூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஆ.ஈசுவரன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் தினேஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சி.ரமேஷ்குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார். கல்லூரி பொருளாளர் கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் வி.ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். 166 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்புஅதன்பின்னர் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளின்படி நடுவர்கள் முன்னிலையில் ஆய்வுகட்டுரைகள் வாசித்தனர். அரசு மற்றும்தனியார் பள்ளிகள் என மொத்தமாக 21 பள்ளிகளில் இருந்து 166 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.நிறைவாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொருளாளர் உமா சங்கர் நன்றி கூறினார்.

இதேபோல், நீலகிரி மாவட்ட அளவிலான 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கூடலூர் கிப்ட் பள்ளியில் நடைபெற்றது. கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார். கூடலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சுரேஷ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன், அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் 18 பள்ளிகளைச் சேர்ந்த இளம் அறிவியல் மாணவ, மாணவிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இயற்கை பேரிடர்பாதுகாப்பு, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், இயற்கையோடு இனைந்துவாழ்தல் உட்பட பல்வேறு தலைப்புகளில் 124 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட நடுவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து பள்ளி மாணவமாணவியருக்கும் இளம் விஞ்ஞானிகள் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த மாவட்ட அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை களில் சிறந்த 13 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, அவை மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதில் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த வீடுகளில் தினசரி உபயோகிக்கப்படும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் சமையல் தவிர பிற உபயோகங்களுக்கு பயன்படுத்துவது குறித்த ஆய்வுக் கட்டுரை மற்றும் அதன் மாதிரிகள் அனைவரையும் கவர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE