எஸ்.கோவிந்தராஜ்
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில், நஞ்சில்லா காய்கறித் தோட்டங்கள் அமைத்து, அதில் விளையும் காய்கறிகளை, சத்துணவுக்கு பயன்படுத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்ட பள்ளிக் குழந்தைகள். இந்த திட்டத்தை முறைப்படுத்தி, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உணவுப்பொருட்கள், காய்கறிகள் என நமது அன்றாட பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பொருட்களிலும், ரசாயனப் பொருட்களின் கலப்பு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீட்டிலிருந்தே வியாதிகளை வரவேற்கக் காரணமாக அமைந்துவிட்டது.
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் காரணமாக இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கான தேவையும், மதிப்பும் அதிகரித்து வருகிறது. ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறி, பழம், அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கான சந்தையும் விரிவடைந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தங்களின் மதிய உணவுக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், தாங்களே விளைவித்து முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் மாணவ, மாணவிகள். ‘நஞ்சில்லாக் காய்கறித் தோட்டம்’ என்ற பெயரிலான இந்த திட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில், பல பள்ளிகளில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்துக்காக, ஒரு குழந்தைக்கு, ஒரு நாளைக்கு 72 பைசாவை அரசு ஒதுக்குகிறது. தற்போதைய காய்கறி விலைக்கு, இந்த ஒதுக்கீடு எவ்வகையிலும் பொருத்தமில்லாததாகும். இந்நிலையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சிறப்புப் பள்ளிகளுக்கோ, இதில் பாதித்தொகைதான் ஆண்டுக்கு ஒருமுறை நிதியாக வழங்கப்படுகிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து யோசித்தபோது, சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புப் பள்ளிகள் அனைத்தும், மலைக் கிராமங்கள் என்பதால், பள்ளி வளாகங்களிலேயே காலியிடங்களில் காய்கறித் தோட்டங்கள் அமைக்க முடிவு செய்தோம். பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனப் பயன்பாடு ஏதுமின்றி, இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யவும் முடிவு செய்து, இயற்கை வேளாண் வல்லுநர் அறச்சலூர் செல்வத்தை அழைத்து வந்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினோம். இப்படி எங்கள் பள்ளி சத்துணவுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தொடங்கப்பட்டதே ‘நஞ்சில்லா காய்கறித் தோட்டம்’ திட்டம், என்றார்.
பர்கூர் மலைப் பகுதியில் உள்ள அக்னிபாவி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் தொடங்கிய இத்திட்டம் விளாங்கோம்பை, குன்றி உள்ளிட்ட குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளுக்கும் விரிவடைந்தது. இந்த திட்டத்தின் பலன், சமவெளியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் பரவியுள்ளது. சத்தியமங்கலம் அருகேயுள்ள குந்தி பொம்மனூர் மற்றும் நடுப்பாளையம் உள்ளிட்ட பல அரசுப்பள்ளிகளில், நஞ்சில்லா காய்கறித் தோட்டங்கள் பசுமையோடு பளிச்சிடுகின்றன.
தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரை, மிளகாய், கீரை மற்றும் பந்தல் காய்கறிகள் இந்த தோட்டங்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இத்தோட்டங்களில் குழந்தைகள் தினமும் ஒரு பாடப் பிரிவில் பணி செய்வர். இங்கு விளைந்த காய்கறிகள், மதிய உணவில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதனால், குழந்தைகள் இயற்கை வேளாண் நுட்பங்களை நன்கு அறிவதோடு, உடலுழைப்பு, உடற்பயிற்சியாகவும் அமைகிறது என்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்குமுன் நஞ்சில்லா காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி
னோம். மலைக் கிராமப் பள்ளியில் தொடங்கியஇந்த திட்டம், சுற்றுச்சூழல் சங்கம், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பால், பல பள்ளிகளுக்கு விரிவடைந்தது. மாவட்டத்தில் 200 அரசுப் பள்ளிகளில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைக்க நாங்கள் பயிற்சி அளித்தோம். இவற்றில் 110 பள்ளிகளில் நஞ்சில்லா காய்கறித் தோட்டங்கள் அமைந்தன.
அப்பள்ளிகளின் சத்துணவுத் தேவைக்கு, மாணவர்களின் உழைப்பால் விளைந்த காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன. அதோடு, நாட்டுக் காய்கறிகளின் விதைகளை கலப்படமில்லாமல் பாதுகாக்கவும் இந்த தோட்டம் உதவியது.
ஈரோடு நகரின் மையப்பகுதியில் உள்ள இடையன்காட்டுவலசு அரசுப் பள்ளியில், தோட்டம் அமைக்க இடமில்லாத நிலையில், மூன்றாவது மாடியில் தோட்டம் அமைத்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாணவர்கள் செயல்படுத்தினர். இந்த திட்டத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு இந்தப் பள்ளியின் செயல்பாடு சான்று.
இயற்கை முறையில் குறைந்த இடத்தில் அதிக காய்கறிகளை வளர்க்கவும், சத்துணவுக்கு ஆண்டுமுழுவதும் சில காய்கறிகள் தேவை என்பதால், அதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்தோம். ஆரம்பத்தில் நாட்டுக் காய்கறி விதைகளை நாங்களே கொடுத்தோம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல், இயற்கை முறையில் இலை, வீணான உணவு, காய்கறிக் குப்பை, சாணம் உள்ளிட்டவற்றை கொண்டு இயற்கை உரம் தயாரித்து, காய்கறித் தோட்டத்துக்கு பயன்படுத்த பயிற்சி அளித்தோம்.
ஆனால், நாளடைவில் பல்வேறு காரணங்களால், பள்ளிகளில் காய்கறித் தோட்டங்கள் குறைந்து, தற்போது 25-க்கும் குறைவான அரசு பள்ளிகளே இதனைப் பின்பற்றுகின்றன. சில தனியார் பள்ளிகளில் இத்தகைய இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்கும் பணியை, பாடத் திட்டத்துடன் கூடிய பணியாக மாற்றியுள்ளோம்.
அரசுப் பள்ளிகளில் சத்துள்ள காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை, இயற்கை முறையில் நஞ்சில்லா காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் அருகாமையில் வசிக்கும் இயற்கை விவசாயிகளைக் கொண்டு, ஆசிரியர், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தயாராக உள்ளது. இதுபோன்ற திட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் ஆதரவளித்து, சிறந்த காய்கறித் தோட்டத்துக்கு விருது கொடுத்து ஊக்குவிக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago