பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, செப்.28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என 523க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே தரவரிசைப் பட்டியல் செப்.17-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், தரவரிசைப் பட்டியல் செப்.25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் தரவரிசைப் பட்டியல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கூறிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.28-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் tneaonline.in என்ற இணையதளப் பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் லாகின் செய்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டதா என்று உறுதி செய்யலாம்.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாணவர்கள் 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.