தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயம் தொடர்பாக 10 விதமான இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. வேளாண் பட்டதாரிகளுக்கு மத்திய, மாநில அரசுப் பணிகள், வங்கிப் பணிகள் மட்டுமின்றி, விஞ்ஞானியாவது, ஏற்றுமதி செய்வது என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி உயர் பதவிகளுக்கும் செல்லலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த தொடர் நிகழ்ச்சியில் பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்று, உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து ஆன்லைன் வாயிலாக உரையாற்றுகின்றனர். அந்த வகையில், கடந்த 16-ம் தேதி காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் சார்ந்த படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என்.குமார்: வேளாண் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகால பி.எஸ்சி. ஆனர்ஸ் விவசாயம், பி.எஸ்சி. தோட்டக்கலை, வனவியல், ஃபுட் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், செரிகல்ச்சர், அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், பி.டெக். அக்ரி இன்ஜினீயரிங், ஃபுட் டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி, எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் என 10 விதமான பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மொத்தம் 3,500 இடங்கள் உள்ளன. 14 பல்கலைக்கழக கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவை தவிர, நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்ளன.
விவசாயம் மற்றும் அதுசார்ந்து படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர், அக்ரி இன்ஜினீயர் போன்ற பணிகளில் சேரலாம். 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை இந்த பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. பி.எஸ்சி. வனவியல் பட்டதாரிகள் யுபிஎஸ்சி தேர்வு மூலம் ஐஎஃப்எஸ் எனப்படும் இந்திய வனப்பணி அதிகாரியாகவும். டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் வனச் சரகர் (ஃபாரஸ்ட் ரேஞ்சர்) பணியிலும் சேரலாம்.
பி.எஸ்சி. வேளாண்மை பாடத் திட்டம் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு ஒரு வரப்பிரசாதம். மேலும், பி.எஸ்சி. விவசாயம் படித்தவர்கள் மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானி பணி வாரியம் நடத்தும் தேர்வு எழுதி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) ஆய்வு நிறுவனங்களில் விஞ்ஞானி பணியில் சேரலாம். அவர்கள் முதுநிலை விஞ்ஞானி, முதன்மை விஞ்ஞானி, இயக்குநர், தலைமை இயக்குநர் என உயர் பதவிகளுக்கும் செல்ல முடியும். நெட் தேர்வு எழுதி உதவி பேராசிரியர் பணியில் சேரும் வாய்ப்புகளும் உள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் ஊரக வளர்ச்சி அதிகாரி, வேளாண் அலுவலர் பணிகளிலும், தென்னை, ரப்பர், காபி, தேயிலை, நறுமணப் பொருட்கள் வாரியங்களில் வளர்ச்சி அதிகாரியாகவும் பணியில் சேரலாம். தனியார் வேலைவாய்ப்பு என்று பார்த்தால் விதை நிறுவனங்கள், உர தொழிற்சாலைகள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், நீர்ப்பாசன நிறுவனங்கள், காபி, தேயிலை எஸ்டேட்களிலும் விவசாயம், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
வேளாண் பல்கலைக்கழக டீன் (விவசாயம்) டாக்டர் எம்.கல்யாணசுந்தரம்: வேளாண்மை மற்றும் அதுசார்ந்த இதர படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு தற்போது நடந்து வருகிறது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 17-ம் தேதி. இந்த ஆண்டு ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆன்லைன் விண்ணப்பத்தில் செப்டம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்துகொள்ளலாம். செப்டம்பர் 29-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும். செமஸ்டருக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் கட்டணம் இருக்கும். ஏழை மாணவர்கள், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) அரசு கல்வி உதவித் தொகை உண்டு. குறைந்த கட்டணத்தில் தரமான உணவு, விடுதி வசதியும் உள்ளது.
சென்னை சுங்கத் துறை முன்னாள் ஆணையர் பி.முத்துசாமி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளை உருவாக்கி இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் நிலவும் அருமையான சூழல், அர்ப்பணிப்பு மிக்க பேராசிரியர்கள், அற்புதமான நூலகம் ஆகியவைதான் இந்த சாதனைகளுக்கு காரணம். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பாடத் திட்டம் அதிகம் என்றபோதிலும், இத்தேர்வில் வெற்றிபெற வேளாண் படிப்புக்கான பாடங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். வேளாண் பட்டதாரிகளுக்கு வங்கி அதிகாரி, விஞ்ஞானி என வெவ்வேறு விதமான வாய்ப்புகள் உள்ளன. வேளாண் உற்பத்தி பொருட்கள், மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.
பேராசிரியை டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அடுத்து எந்த துறையில் சேர்வது என முடிவு செய்வது சவாலான விஷயம். எதிர்கால வாழ்க்கையை, எதிர்காலப் பாதையை தீர்மானிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. கரோனா ஊரடங்கு காரணமாக 4 மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த காலகட்டத்தை எப்படி பயனுள்ளதாக உபயோகப்படுத்தினோம் என்று மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நீண்ட காலத்தில் எத்தனை நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டோம், எத்தனை நூல்கள் படித்தோம், புதிதாக ஏதேனும் ஒரு மொழியை கற்றோமா? இப்படி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கொள்வது அவசியம்.
நீங்கள் இதுவரை படித்தவற்றில் அடிப்படை அறிவு உடையவர்களாக இருக்க வேண்டும். மொழிப் புலமையை, தகுதியை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை உந்தி வெளியே கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு புதிய முயற்சியும் ஒரு சவால். ஒவ்வொரு சவாலும் புதுப்புது தீர்வுகளைக் கொண்டுவரும்.
முதலில் உங்கள் ஆசையை மனக் கண்ணால் கொண்டுவாருங்கள். அடுத்த 3 ஆண்டில், அல்லது 5 ஆண்டில் எப்படி இருக்கப் போகிறோம், எந்த நிலையில் இருப்போம் என்பதை எல்லாம் மனதில் நினையுங்கள். அப்படி நினைத்துப்பார்க்கத் தொடங்கினாலே, அதை சென்றடைவதற்கான தெளிவான வழியும் புலப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிறைவாக, மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இதை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இதில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/3g8v8bS என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago