அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர் மன்றம்: பள்ளிக்கு 25 பேரை சேர்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்காக முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக அரசு பள்ளியின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை வரும் 20-ம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் வரும் 14-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் மா. ஆர்த்தி சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். அதன் விவரம்:

அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்காக முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.அதற்காக முன்னாள் மாணவர்கள் மன்றம் அமைத்திட வேண்டும். முதற்கட்டமாக அரசு பள்ளியின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை வரும் 20-ம் தேதிக்குள் கண்டறிந்து tnschools.gov.in இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மாற்றுத்திறன் மாணவருக்கு சிறப்பு ஏற்பாடு: மாற்றுத்திறனுடைய மாணவர்கள் பள்ளியில் தாம் தேர்ச்சி பெற்ற வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு எவ்வித தடையோ அல்லது இடைநிற்றலோ இல்லாமல் போய் சேர வேண்டும். மேலும் அவர்கள் வகுப்பறையில் எவ்வித சிரமமும் இல்லாமல் அமர்ந்து படிப்பதற்குரிய இருக்கையை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனுடைய மாணவர்களை பள்ளி அளவில் இம்மாதம் முதல் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ச் செய்வதுடன் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிவழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வது தொடர்பான வழிமுறைகளைக் கலந்து ஆலோசித்து உறுதி செய்ய வேண்டும்.

ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாற்றியமைக்கப்பட்ட பயிற்சிப் புத்தகம் பள்ளியில் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் தெரிவிக்க வேண்டும்.

அடுத்தகட்ட எண்ணும் எழுத்தும்: பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடைபெறும் நாளில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் 3 பேரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து அவர்கள் சார்ந்த மையத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை வருகைப்பதிவு, கற்றல் அடைவு மற்றும் அடுத்த 2 மாதத்திற்கான செயல்திட்டம் குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்.

1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் இப்போது 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை தெரிந்து கொண்டு வகுப்பறையில் கற்பித்தல் மேற்கொள்ள ஏதுவாக அடிப்படை மதிப்பீடு நடத்தப்பட்டு உள்ளது. இத்தகவல்களை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட கள அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இச்சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மேற்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெறுவதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட அலுவலர்கள், பள்ளிமேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE