மத்திய பட்ஜெட்டில் கல்வி

By செய்திப்பிரிவு

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதில் பள்ளி கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து விடிவு கிடைத்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட போதிலும் அக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை இன்னும் முழுவதுமாக வென்றபாடில்லை.

இது தவிர அக்காலகட்டத்தில் பள்ளி கல்வியை பாதியில் இழந்த ஆயிரக்கணக்கான சிறார்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கெனவே லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்புக்கு உரிய எண் அறிவோ, எழுத்தறிவோ இன்றி அறியாமையின் இருளில் வாடிக் கொண்டிருப்பதை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அசர் உள்ளிட்ட கல்வி அறிக்கைகள் கவனப்படுத்தி வந்துள்ளன.

இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.

அரசு பள்ளிகளை வளர்த்தெடுப்பதே தீர்வுகான சிறந்த வழி. ஏனெனில் இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளில் ஒட்டுமொத்தமாக 51 சதவீதத்தினர், குறிப்பாக கிராமப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதி வாழ் குழந்தைகளில் 80 சதவீதத்தினர் அரசு பள்ளிகளில்தான் படித்து கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய பள்ளிகளில் தரமான கற்றல் சூழலும், தடையற்ற மின்வசதியும், சுகாதாரமும் உறுதி செய்யப்பட வேண்டும். மாவட்டம் தோறும் உருவாக்கப்பட்டிருக்கும் மாதிரி பள்ளிகள் போல அத்தனை அரசு பள்ளிகளின் தரம் உயர போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE