எங்கே சறுக்கல் நேர்ந்தது?

By செய்திப்பிரிவு

தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகச்சிறப்பாக இருப்பதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஸ்டெம் படிப்புகளில் சேர்ந்திருப்பதும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களில் 21.4% பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களைக்கூட வாசிக்கத் தெரியவில்லை.

ஏசர் எனும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை 2023-ன்படி தமிழகத்தில் 14-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 97.2% மாணவர்கள் தங்களது வயதுக்குரிய வகுப்பில் படித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 70.3% பேர் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் விரிவாக நடத்தப்பட்ட ஆய்வு இது. இதில் 52.1% பேருக்கு வகுத்தல் தெரிந்துள்ளது. 78.3% மாணவர்களுக்கு ஆங்கில வாக்கியங்களை வாசிக்கும் திறன் உள்ளது. 72.7% மாணவர்கள் ஸ்டெம் படிப்புகள் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து பிளஸ் 1 வகுப்பு படித்துவருகின்றனர். பிரகாசமான எதிர்காலம் கொண்ட இவ்வகை துறைகளை பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு செய்து படித்துவருவது வளர்ச்சிப்பாதையில் தமிழக மாணவர்கள் நடைபோடுவதைக் காட்டுகிறது. 92.3% மாணவர்களிடம் திறன்பேசி பயன்பாடு சகஜமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் அறிவில் நாட்டின் சராசரியைவிடவும் இது அதிகம்.

ஆனால், மூன்றில் ஒரு பகுதியினருக்கு அடிப்படை எண், எழுத்தறிவு இல்லை. கடந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும்கூட அறியாத சிலர் எப்படி மேல்நிலை வகுப்புகள்வரை அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்கிற கேள்வி ஒட்டுமொத்த மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால். தமிழக பள்ளிக்கல்வித்துறை சமரசமின்றி சுயபரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE