வந்தாருக்குக் கல்வி அளிப்போம்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் ரோஷிணி திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வெற்றிகரமாகக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பின்தங்கிய இந்திய மாநிலங்களிலிருந்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் பிழைப்பு தேடி இடம்பெயர்கிறார்கள். இதுபோல தமிழ்நாட்டுக்கு வந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு தமிழ்நாட்டில் வேலைசெய்யும் வட இந்தியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. அதனையடுத்து தமிழ்நாடு அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தது.

புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலோர் கட்டிட வேலை, உணவு விடுதிகளில் சர்வர் வேலை, கூலி வேலை, தெருவோர கடைகளில் சின்ன சின்ன எடுபிடி வேலை போன்ற கடைநிலை வேலைகளில்தான் அமர்த்தப்படுகிறார்கள். அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ள இவர்களுக்குச் சொற்ப ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படி ஊர் விட்டு ஊர் சென்று நாடோடி வாழ்க்கையை வாழும் இவர்களது குழந்தைகளின் கல்வி பற்றி கேட்பாரில்லை.

இந்நிலையில் கேரள அரசு ரோஷிணி எனும் திட்டத்தின் வழியாக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி புகட்டி வருகிறது. பிராந்திய மொழியைக் கற்பிப்பதில் தொடங்கி, காலை சிற்றுண்டி வழங்குதல் வரை அக்குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் அங்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வந்தாருக்கு கல்வி அளிக்கும் பணியும் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE