உயரப் பறக்க வைக்கும் ஆசிரியர்

By செய்திப்பிரிவு

அரியலூர் அருகே மாணவி ஒருவரை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று அசத்திய பள்ளி தலைமை ஆசிரியரை பெற்றோர் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மத்திய அரசு சார்பில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தனது மாணவர்கள் வெற்றி பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக வானநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ஊக்கப்படுத்தினார்.

அதன்படி தேர்வை எழுதி மாணவி மிருணாளினி தேர்ச்சி அடைந்தார். உள்ளதை சொல்வேன், சொன்னதை செய்வேன் என்பதை நிரூபிக்கும் விதமாக தலைமை ஆசிரியர் அமுதா வெற்றிபெற்ற தனது மாணவி மிருணாளினியை திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். சென்னையின் முக்கிய இடங்களை மாணவிக்குச் சுற்றிக் காண்பித்துவிட்டு ரயிலில் அரியலூருக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த விஷயத்தில் மாணவி மிருணாளினியின் சாதனைக்கு இணையாக அவரை சாதிக்கத் தூண்டிய ஆசிரியை அமுதாவும் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு மாணவ, மாணவிக்குள்ளும் இதுபோன்ற எத்தனையோ திறமைகள் ஒளிந்திருக்கும்.

அவற்றை வெளிக்கொணர அன்பும் அரவணைப்பும் அக்கறையும் நிறைந்த ஆசிரியர்களால் மட்டுமே முடியும். பெற்றோர் சொல்லிக் கேட்காத குழந்தைகள்கூட ஆசிரியரின் கனிவுடன் கூடிய கண்டிப்புக்கு கட்டுப்படுவார்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்தது ஆசிரியர் பணி.

இன்று ஒரு மிருணாளினி ஊக்கம் பெற்று தனது ஆற்றலை நிரூபித்திருக்கிறார். நாளை நூற்றுக்கணக்கான மிருணாளினிகள் உத்வேகம் அடைவார்கள். அதற்கு மென்மேலும் நம் மாணவர்களை உயர பறக்க வைக்கும் ஆசிரியர்கள் உருவெடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE