சுதந்திர தினம் ஸ்பெஷல்: தேசியக்கொடி இரவு நேரமும் பறக்கலாம்

By செய்திப்பிரிவு

நம் நாட்டின் தேசிய கொடியை பயன்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள், இந்தியாவின் கொடி சட்டம்-2002 மற்றும் தேசத்தின் கவுரவத்தை இழிவுபடுத்தல் தடுப்புச் சட்டம்-1971 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, காலையில் ஏற்றப்படும் தேசிய கொடியை மாலையில் இறக்கிவிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் தேசியக் கொடி பறக்கக்கூடாது.

அதேபோல், கையால் செய்யப்பட்ட காதி துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும், உடையாகவோ உடையின் ஒரு பகுதியாகவோ, அலங்காரமாகவோ மூவர்ண கொடியை பயன்படுத்தக்கூடாது.

இந்நிலையில், மத்திய அரசு அண்மையில் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, தேசிய கொடி இரவு நேரங்களிலும் பறக்கலாம். பாலிஸ்டர் துணிகளால் ஆன, இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளையும் பயன்படுத்தலாம்.

மாவட்டம் தோறும் பல்துறை விளக்க கண்காட்சி: மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்துறை விளக்க சுதந்திர தின கண்காட்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு “நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்” என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு “2047-ல் இந்தியா” என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு கள் அறிவிக்கப்பட்டன.

ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அணுசக்தி துறை சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு கண்காட்சி

ரயில்வே, அஞ்சல்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பிலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் சார்பிலும் நாடு முழுவதும் சுதந்திர தின கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

அணுசக்தி துறையில் இந்தியா கடந்து வந்த பாதை, அதன் சாதனைகளை எடுத்துரைக்கும் வண்ணம் இந்திய அணுசக்தி கழகம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் பள்ளி, கல்லூரிகளில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

கண்காட்சியை பார்வையிட்ட மாணவ, மாணவிகள் இந்தியாவின் அணுசக்தி சாதனைகளை கண்டு வியந்தனர். அவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர். அத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சிகள் தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றனர்.

சுவரில் ஓவியம் தீட்டும் மாணவர்கள்: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு சுவர்கள், பாலங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தடுக்கும் வகையில் அந்த சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைய மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகடாமி இலவச பயிற்சி மைய மாணவர்கள் அரசு சுவர்களில் ஓவியங்களை வரைய, அகாடமி நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து, மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார அலுவலர் அரிகணேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து 10 மாணவியர், 2 மாணவர்கள் இணைந்து தூத்துக்குடி 3-ம் கேட் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் உள்ள சுவர்கள், தூண்களில் வண்ண ஓவியங்களை வரைந்தனர். மாநகராட்சி ஆணையர் தி.சாரு ஓவியம் வரையும் பணியை பார்வையிட்டு மாணவியரை பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE