சிஏ படிப்புகள் உலகத் தரமாகிறது; பாடத்திட்டத்தில் வருகிறது மாற்றம்

By செய்திப்பிரிவு

சிஏ எனப்படும் கணக்குத்தணிக்கை குறித்த படிப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உலகத் தரத்திற்கு மாறுகிறது.

இந்திய கணக்குத்தணிக்கை மையம் (ஐசிஏஐ) நாடு முழுவதும் சிஏ, சிஎம்ஏ எனப்படும் கணக்குத்தணிக்கை தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தப்படிப்பை படித்து வருகின்றனர். இதில் 42 சதவீதம் மாணவிகள் என்று ஐசிஏஐ தலைவர் தேபோசிஸ் மித்ரா பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மதிப்புமிக்கதாக கருதப்படும் இப்படிப்புகளை ஐசிஏஐ அமைப்பு காலத்திற்கேற்ற மாற்றங்களை கொண்டு வந்து தரம் மிக்கதாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. இப்படிப்பை முடித்தவர்கள் உடனடியாக நல்ல வேலைவாய்ப்பை பெறும் நிலை உள்ளது. இப்படிப்பை மேலும் தரம்மிக்கதாக மாற்றும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர கல்வி மற்றும் பயிற்சி மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தேசிய கல்விக் கொள்கையையும் கருத்தில் கொண்டு மாற்றங்களை முன்வைத்துள்ளது.

மாணவர்களுக்கான நேரடி பயிற்சியை அதிகரித்தும், திறமைக்கேற்ப ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளும் வகையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இடர்கால நிர்வாகம், நுண்ணறிவு தணிக்கை, டிஜிட்டல் சூழ்நிலை, தொழில்நுட்பம், வணிகநெறி, பன்னாட்டு நிறுவன தணிக்கை, சமூக பொறுப்பு நிதி தணிக்கை, கார்பன் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மாணவர்கள் கற்றறிந்து உலக அளவில் போட்டி போடும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

இந்திய மாணவர்களுக்கும், வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற வகையில் உலகத்தரத்திற்கு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய வரைவு திட்டம் ஐசிஏஐ மையத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குச் சென்றுள்ளது. அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பின், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தணிக்கை தொடர்பான பணியில் இருப்பவர்களில் கருத்துக்காக வெளியிடப்படும். 45 நாட்களுக்குப் பின் வரைத்திட்டம் இறுதி வடிவம் பெற்று பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றங்கள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறை தணிக்கையாளர்களை உலக அளவில் போட்டி போடும் வகையில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE