உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் தீர்வு

By மா. சண்முகம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க, அந்நாட்டில் இருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்வேறு இன்னல்களைத் தாண்டி மத்திய அரசின் முயற்சியால் இந்தியா திரும்பினர். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பு பாதியில் தடைபட்டதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இதுபோக சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பெருந்தொற்று காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த மாணவர்களும் மீண்டும் திரும்ப விசா கிடைக்காத நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருந்தனர்.

இவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ள நிலையில், படிப்பு தொடர முடியாமல் போனால் தவணைத் தொகையை செலுத்துவது எப்படி என்றும் தெரியாமல் தவித்தனர். மொத்தம் ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்ததால் அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியிலும், மாணவர்கள் தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட முதல்வர்கள் மாணவர்களுக்கு ஆதரவாகவும், படிப்பை தொடர தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் என்றும் ஆறுதல் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர அனுமதித்தால் இங்கு ஏற்கெனவே சேர்ந்துள்ள மாணவர்கள் மத்தியிலும், இடம் கிடைக்காத மாணவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்படும். மருத்துவக் கல்வியின் தரம் பாதிக்கப்படும், ஆசிரியர்களால் சமாளிக்க முடியாது என்பது போன்ற எதிர்ப்புகள் கிளம்பின.

இதுதவிர, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே அதற்கான சாத்தியம் ஏற்படும் என்பது போன்ற கருத்துகள் முன்மொழியப்பட்டன.

பல்கலைக்கழகம் தகவல்: இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் வழிதெரியாமல் நின்றிருந்த மாணவர்களுக்கு தற்போது உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இருந்து இ-மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அவர்கள் சொந்த நாட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று படிப்பை தொடரலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில் ‘தியரி’ வகுப்புகள் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளது. செய்முறை பயிற்சிகளை மீண்டும் அங்கு நிலைமை சரியான பிறகு சென்று தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திரிசங்கு நிலையில் இருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இருந்து வந்துள்ள தகவல் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. ஆன்லைன் மூலம் பயிலும் மருத்துவப் படிப்புகளை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், படிப்பு முடிந்து உக்ரைன் பல்கலைக்கழகம் பட்டம் வழங்கிவிட்டால், அந்த பட்டம் அங்கீகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைத் தான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கருத்தில் கொள்ளும்.

உக்ரைன் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே மத்திய சுகாதாரத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வருவதால் அவை வழங்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். இதேபோன்று சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் அங்கு படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடர முயற்சிகள் எடுத்துவருவதால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE