ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணி நடந்து வருகிறது. இதில், இந்தியாவுக்கு திரும்பிய மாணவர்களில் பலர் இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு படிப்புகளை முடித்த நிலையில், மருத்துவப் படிப்பின் பாதியைக் கடந்துவிட்டு மீதி படிப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஏறக்குறைய 20,000 மாணவர்கள் இந்த நிலையில் உள்ளனர்.
இதுதவிர, 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் பரவியபோது, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா திரும்பிய அந்த மாணவர்கள் மீண்டும் அந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர அந்நாடுகள் விசா வழங்க மறுத்து வருவதால் செய்வதறியாது திணறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுடன் இந்த மாணவர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் மாணவர்கள் நட்டாற்றில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து எஞ்சிய படிப்பை முடிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றால் தற்போதுள்ள இடங்களைவிடக் கூடுதலாக இடங்களை உருவாக்கி சேர்க்கும் வகையில் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி), மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பிலும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வித்தரம் என்னவாகும்?
அப்படியே அவர்களை சேர்த்தாலும், இங்குள்ள ஆசிரியர் மாணவர் விகிதம் பாதிக்கப்படும். மருத்துவக் கல்லூரியின் தரம் கேள்விக்குறியாகும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஏற்கெனவே மருத்துவப் படிப்பை முடித்து இங்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பலர் உள்ளனர். அவர்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழும். அப்படி செய்தால் இங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் அனைத்து தரப்பினரும் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பெற்றோர் சிலர் போலந்து போன்ற சாத்தியமுள்ள நாடுகளில் எஞ்சிய படிப்பை தொடர மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். இந்தக் கருத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனா, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இருந்தாலும் இப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன வழி என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக நிகர்நிலை பல்கலைக்கழக கூட்டமைப்பு சார்பில், பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘மாணவர்கள் நலன் கருதி உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை எங்கள் கல்லூரிகளில் தலா 25 பேர் வீதம் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். இதற்காக மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான கட்டணத்தை வசூலித்துக் கொள்கிறோம். அதற்கு மத்திய அரசு விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு சிறப்பு நேர்வாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடா வாய்ப்பு
வளைகுடா மருத்துவ பல்கலைக்கழகமும் இந்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது. இதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் சம்மதித்தால் மட்டுமே இந்த முயற்சி சாத்தியமாகும். உக்ரைனில் ரூ.15 - 17 லட்சம் அளவில் மாணவர்களால் படிப்பை முடிக்கலாம். ஆனால், வளைகுடா நாடுகள், ஜெர்மனி போன்ற இடங்களில் மருத்துவ படிப்புக்கு 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் தரப்பில் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசின் முடிவுக்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago