தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகிவிட்டது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 5-ம் தேதி துவங்கி 28-ம் தேதி முடிகிறது. 11-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதி துவங்கி, 31-ம் தேதி முடிகிறது. 10-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதி துவங்கி, 30-ம் தேதி முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவால் பலதரப்பட்ட மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது மாணவர் சமுதாயம் என்று கூறலாம். பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்றனர். அதற்கும் வாய்ப்பில்லாமல் பல கிராமப்புற மாணவர்கள் மொபைல் போன் வசதி இல்லாமல், அப்படியே இருந்தாலும் இணையத்தொடர்பு இல்லாமல் அவதிப்பட்டனர். நகர்ப்புறங்களில் ஒரு மொபைல்போன் வைத்திருக்கும் குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளை ஆன்லைன் மூலம் படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேற்படிப்புக்கு கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் கல்லூரியையே பார்க்காமல் படிப்பை முடித்துவிட்டனர். இவற்றுக்கெல்லாம் முடிவு ஏற்படும்வகையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மெல்ல மெல்ல மாணவர் சமுதாயம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கத்தைவிட இரண்டு மாதங்கள் தள்ளிப்போனாலும் தமிழக கல்வித்துறை இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவர்களும், 11-ம் வகுப்பு தேர்வை 8.49 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பு தேர்வை 8.36 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். ஏறக்குறைய மொத்தம் 26 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு தயராக உள்ளனர். தேர்வுக்கு தயாராக இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவாகவே அவகாசம் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் முன்பு முதலில் பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எதைப் படிக்க வேண்டும் என்ற வரம்பு நமக்கு தெரியவரும்.
தேர்வுக்கு முன்பாக எத்தனை நாட்கள் அவகாசம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதை ஒவ்வொரு பாடத்திற்கும் இத்தனை நாட்கள் என ஒதுக்கி அட்டவணை தயாரிப்பது அவசியம். அந்த அட்டவணைப்படி ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு கேள்வித்தாள்களை படிக்க சில தினங்களை ஒதுக்கலாம். அந்த அட்டவணையில் பாடங்கள் குறிப்பிடாமல் சில நாட்களை ஒதுக்கி வைப்பது அவசியம். தவிர்க்க முடியாத காரணங்களால் சில நாட்களில் திட்டமிட்டபடி படிக்க முடியாமல் போகும்போது, பாடங்கள் குறிப்பிடாமல் ஒதுக்கிவைத்துள்ள அந்த நாட்களில் விடுபட்ட பாடங்களை படித்துக் கொள்ள முடியும். கடைசியில் தேர்வுக்கு முன்பாக சில நாட்களை படித்தவற்றை நினைவுகூர ஒதுக்குவது நல்லது.
கண்ட நேரத்தில் படிப்பதைவிட, ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் படிப்பது, எத்தனை மணிநேரம் படிப்பது என்று முடிவு செய்வது இன்னும் பலனளிக்கும். 24 மணிநேரமும் படிக்கிறேன் என்ற பெயரில் சில மாணவர்கள் உடல்நலனைக் கெடுத்துக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் படிப்பதற்கான நேரம் போக, சிறிது நேரம் நமக்குப் பிடித்த விஷயங்களான விளையாட்டு, பொழுதுபோக்கு என ஈடுபடுவது படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த உதவும். இரவு தூக்கத்திற்குப் பின் அதிகாலை நேரத்தில், அதாவது காலை 4 மணி முதல் 8 மணி வரை படிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும். ஏனென்றால் அதிகாலை நேரத்தில் மற்ற இடையூறுகள் குறைவதுடன், தூங்கி எழுந்ததும் படிப்பதால், மூளைத்திறன் சிறப்பாக இருக்கும் என்பது உளவியலாளர்கள் கருத்து.
புரியாத பாடங்களை என்ன செய்வது?
ஒரு சில பாடப்பகுதிகள் எத்தனை முறை படித்தாலும் புரியாது. அத்தகைய நேரங்களில் அந்தப் பாடங்களை புரிந்து கொண்ட மாணவர்களின் உதவியை நாடுவது நல்லது. ஆசிரியர்களிடம் மீண்டும் விளக்கும்படி கேட்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். அப்போதும் புரியவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட பாடப்பகுதியை மட்டும் வெவ்வேறு புத்தகங்கள் மூலம் படித்து புரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் கல்லூரி அளவிலான புத்தகங்களில் இருந்துகூட விரிவான தகவல்களைப் பெற்று புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். ஏனென்றால், ஒரே பாடத்தை வெவ்வேறு கல்வியாளர்கள் வெவ்வேறு விதமாக விளக்கியிருப்பார்கள். ஒரு புத்தகத்தில் நமக்கு புரியாதது, வேறொரு கல்வியாளர் வேறுவிதமாக விளக்கும்போது புரிந்துவிடும். எந்தப் புத்தகம் நமக்குப் புரியும் வகையில் அந்தப் பாடத்தை விளக்குகிறது என்பதை கண்டறிந்து அதன் உதவியுடன் புரிந்து கொள்வது பலனளிக்கும். மாணவர்களுக்கு எந்தநேரத்திலும் பதட்டம் கூடாது. இருக்கும் காலகட்டத்தைப் பிரித்து அட்டவணை உருவாக்கி, அதன்படி நிதானமாக படிப்பதன்மூலம் தேர்வில் நம் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியும்.
மனநிலை முக்கியம்
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் மனநிலை தான். மனநிலை திடமாக இருக்க வேண்டும். தேர்வில் வெற்றிபெறுவோமா, தோல்வியடைவோமா, 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியுமா? கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியுமா? என்பது போன்ற சிந்தனைகளுக்கு துளியும் இடம்தரக் கூடாது. பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தை இதுபோன்ற சிந்தனைகள் சிதைத்துவிடும். கவலையை உருவாக்கி நம் திறனை குறைத்துவிடும். தேர்வு முடிவைப்பற்றி சிந்திக்கவே கூடாது. முழுத்திறனையும் தேர்வுக்கு தயாராவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முழு சிந்தனையும் தேர்வுக்கு தயாராவதில் மட்டுமே இருக்க வேண்டும். முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனஉறுதியுடன் தேர்வுக்கு தயாராகும் காலத்தை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்!
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago