விஜயதசமி: ஆசிரியர்களிடம் ஆசி பெற்றுக் கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்

By செ.ஞானபிரகாஷ்

விஜயதசமி பண்டிகையை ஒட்டி ஆசிரியர்களிடம் ஆசிர்வாதத்தைக் குழந்தைகள் பலரும் பெற்றனர். அதேபோல், பெற்றோர்கள் குழந்தைகளை நெல்லில் எழுதி, கல்வியைத் தொடங்கினர்.

விஜயதசமியை ஒட்டி பாடங்கள், கலையைக் கற்றுத் தரும் ஆசிரியர்களிடம் குழந்தைகள் பலரும் இன்று ஆசிர்வாதம் பெற்றனர். படிப்பு, கலைகளில் சிறந்து விளங்க இந்நாளில் குருவை வழிபடுவது நம் கலாச்சாரங்களில் ஒன்று. அதேபோல் புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் சன்னதியில் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நெல்லில் , "ஹரி நமோஸ்து சித்தம்" என்று எழுதி, பிறகு "அ" என்ற எழுத்தை எழுத வைத்தனர்.

அதையடுத்து ஹயக்ரீவருடைய மூல மந்திரத்தைக் காதில் ஓதி, வித்யா ஆரம்பம் என்ற கல்வி தொடக்கத்தை குழந்தைகளுக்குத் தொடங்கினர். இதில் ஏராளமான பெற்றோர்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

விஜயதசமி நாளில் கல்வி, கலைப் பணிகளைத் தொடங்குவது சிறப்பானது என்பதால் இந்நிகழ்வில் காலை முதல் ஏராளமானோர் பங்கேற்றனர்.


வெளியூரில் இருந்து வருகை:

குறிப்பாக சென்னை, விழுப்புரம், கடலூர் பகுதியில் இருந்து பெற்றோர்கள் வந்திருந்ததால், கோயிலில் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகளும் குடும்பத்துடன் கலந்துகொண்டு அர்ச்சனை செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE