மிருதங்க வாசிப்பில் அசத்தும் ஆட்டிசம் பாதித்த இசைப்பள்ளி மாணவர்; பாடுவதிலும் வல்லவர்

தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசிப்பதிலும் தேவாரம் பாடுவதிலும் தடம் பதித்து வருகிறார் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் மூன்று வருட முழு நேரப் பயிற்சி வகுப்பாக நடத்தப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் மூன்று ஆண்டு மிருதங்கப் பயிற்சியை நிறைவு செய்துவிட்டு தற்போது தேவாரம் மற்றும் தவில் ஆகியவற்றைக் கற்று வருகின்றார் ராமநாதபுரம் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் - செல்வி தம்பதியின் ஒரே மகன் விக்னேஷ். 27 வயதான இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்.

இவருக்கு 7 வயதுக்கு உரிய மன வளர்ச்சியே உள்ளது. தெளிவாகப் பேச முடியாவிட்டாலும் கூட தேவாரம் பாடுவதிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் சிறப்பாகத் தடம் பதித்து வருகின்றார்.

விக்னேஷ் 8-ம் வகுப்பு வரை தாயார் செல்வயின் துணையுடன் பள்ளி சென்று வந்துள்ள நிலையில், தொடர்ந்து இசை மேல் இருந்த ஆர்வத்தினால் ராமநாதபுரம் இசைப் பள்ளியில் மிருதங்கம் வகுப்பில் சேர்த்துள்ளார் அவரது தாயார்.

விக்னேஷ்க்கு மிருதங்கப் பயிற்சி அளித்தவர் இசைப் பள்ளியின் ஆசிரியர் லட்சுமணன். 3 ஆண்டுகள் மிருதங்கப் பயிற்சியை நிறைவு செய்து தற்போது தனது குருநாதர் லட்சுமணன் உடனேயே பக்கவாத்திய மிருதங்கக் கலைஞராகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார். மேலும் தவில் வாசிப்பதிலும் தேவாரம் பாடுவதிலும் தடம் பதித்து வருகிறார்.

தினமும் இசைப்பள்ளியில் தொடர் இசைப் பயிற்சி மேற்கொள்ளும் விக்னேஷ், திரையிசைப் பாடல்களைப் பாடுவதோடு, பல குரல் மிமிக்ரி செய்தும் அசத்துகின்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE