விரைவில் புதிய பல்கலைக்கழகங்கள்: புதுவை முதல்வர் ரங்கசாமி 

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் விரைவில் புதுப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் 280 ஏக்கரில் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. 1986-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்துடன் இருந்தது. ராஷ்ட்ரீய உச்சதர் சிக்சா அபியான் (ரூசா) திட்டத்தின் கீழ், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லூரிகள் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி பொறியியல் கல்லூரியைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த, மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்தது.

இந்நிலையில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "பொறியியல் கல்லூரியானது பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதிலோ, கட்டண விஷயத்திலோ மாற்றம் இருக்காது என்று மாணவர்களுக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். அது வரவேற்புக்குரியது. மாணவர்களிடம் இருக்கும் பயத்தைப் போக்குவது அரசின் கடமையாகும். இங்கிருந்து செல்லும் மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் நல்ல பணியில் அமர்த்தப்படுகின்றனர். அது முக்கியம்.

எப்படிப்பையும் தொழில்நுட்பத்துடன் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவார். புதுச்சேரி புகழ் டெல்லி மட்டுமில்லாமல் உலக அரங்கில் பரவியுள்ளது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள், பொறியாளர்கள் செய்து முடிப்பார்கள். இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் மாணவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்று பெயர் பெறவேண்டும் என்ற கனவு எனக்குண்டு" என்று தெரிவித்தார்.

விரைவில் புதுப் பல்கலைக்கழகங்கள்

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "புதுச்சேரி பொறியியல் கல்லூரி 1986-ல் 80 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 2000 மாணவர்கள் படிக்கின்றனர். புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரிக்குத் தனி மரியாதை உண்டு. அது தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக அறிவித்து, தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 2015-ல் அங்கீகாரம் கிடைத்தது. 2016-ல் அடிக்கல் நாட்டினோம். தற்போது பல்கலைக்கழகமாகத் தொடங்கியுள்ளோம்.

நம்முடைய முதல் மாநிலப் பல்கலைக்கழகம் இதுதான். இன்னும் பல பல்கலைக்கழகங்கள் வர உள்ளன. வேளாண் பல்கலைக்கழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை விரைவில் வரும். அதேபோல் சட்டக் கல்லூரி சட்டப் பல்கலைக்கழகமாக மாறும்.

பல்கலைக்கழகமாக மாறினால் கட்டணம் உயருமா என்று மாணவர்கள் கேட்டனர். தற்போது உள்ள நிலையே தொடரும் என்று சட்டக் கல்லூரி மாணவர்களிடம் தெரிவித்தோம். பல்கலைக்கழகங்கள் ஆனால் பல நாடுகள், மாநிலங்களில் இருந்து படிக்க மாணவ, மாணவிகள் வர வாய்ப்பு உண்டு. நல்ல நட்புணர்வும் ஏற்படும். ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ந்து வரும் இந்தப் பல்கலைக்கழகம் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாறும்" என்று தெரிவித்தார்.

கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்புரையில், "புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி செயல்பட அடிக்கல் நாட்டி முதல் விதையை விதைத்தவர் குடியரசு துணைத் தலைவர்தான்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE