காரைக்கால் அரசுப் பள்ளியில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி

By வீ.தமிழன்பன்

காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (செப்.11-ம் தேதி) நடைபெற்றது.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு எனப் புரட்சிகரமான பாடல்களை எழுதினார்.

மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று அவரின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (செப்.11-ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குப் பள்ளியின் துணை முதல்வர் (பொறுப்பு) ஞானப்பிரகாஷ் தலைமை வகித்து, பாரதியின் விடுதலை வேட்கை, அவரின் புரட்சிக் கவிதைகள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினார். தலைமையாசிரியர் ஜெயசெல்வி முன்னிலை வகித்து பாரதியின் கவிதைகள் குறித்துப் பேசினார். பெண் விடுதலையில் பாரதியின் பங்கு குறித்து தமிழாசிரியர் புவனேஷ்வரி பேசினார்.

வரும் காலங்களில் பாரதியின் பிறந்த நாள், நினைவு நாளில், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு கவிதை அரங்கமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என விரிவுரையாளர் வேலுச்சாமி கேட்டுக்கொண்டார்.

பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியின் உருவப் படத்துக்கு ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளியின் நுண்கலை ஆசிரியரும், என்.சி.சி. அலுவலருமான என்.காமராஜ், மாணவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE