பள்ளிகளில் அதிகரிக்கும் கரோனா: இன்று முக்கிய ஆலோசனை

பள்ளிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் தொற்றின் பரவல் குறைந்துதால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

இதை அடுத்து மாணவ, மாணவியருக்கு கோவிட் 19 தொற்று பரவியது எப்படி, அதைக் கட்டுப்படுத்த என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பன குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டறிய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டன. தொற்று வேகமாக அதிகரித்து கரோனா 2-வது அலை ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE