15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் கரோனா சோதனை

By செய்திப்பிரிவு

பள்ளிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கரோனா சோதனை நடத்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் சற்று தணிந்துள்ளதால் செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஆர்டி- பிசிஆர் சோதனை நடத்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்துத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ முருகேஷ்‌, துறை சார் அலுவலர்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''அரசின்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வகைப்‌ பள்ளிகளில்‌ 9,10,11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு மட்டும்‌ 01.09.2021 முதல்‌ சுழற்சி முறையில்‌ வகுப்புகள்‌ தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கும்‌, ஆசிரியர்களுக்கும்‌ எவ்வித பாதிப்பும்‌ ஏற்படா வண்ணம்‌ மாவட்ட நிர்வாகத்தால்‌ பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்‌ தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ளா அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும்‌ கண்டிப்பாகத் தங்கள்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப் பணியாளர்கள்‌ அனைவரும்‌ 15 தினங்களுக்கு ஒரு முறை அருகில்‌ உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்‌ மற்றும்‌ அரசு மருத்துவமனைகளில்‌ கரோனா பரிசோதனை மேற்கொள்வதை முறையாக உரிய நடவடிக்கை மூலம்‌ முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும்‌, பள்ளிக்கு வரும்‌ அனைத்து மாணவர்களையும்‌ சுழற்சி முறையில்‌ ‌ கரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண்‌ பணியினை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும்‌ தவறாமல்‌ கண்காணித்து ஒவ்வொரு 15 தினங்களுக்கும்‌ தவறாமல்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ மூலம்‌ அறிக்கை சமர்ப்பிக்கவும்‌ அறிவுறுத்தப்படுகிறது.

இப்பணிக்கு என ஏற்கெனவே நியமனம்‌ செய்யப்பட்டுள்ளா பொறுப்பு அலுவலர்கள்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளைக் கண்காணித்து இப்பொருள்‌ சார்ந்து அறிக்கையினை அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது''.

இவ்வாறு திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE