சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள்: கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின தொடக்க விழாவில் முக்கியக் கல்வித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 'ஷிக்‌ஷாக் பார்வ்' (ஆசிரியர் தின விழா) கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வைப் பிரதமர் மோடி இன்று (செப்.7) இணையம் மூலம் தொடங்கி வைத்தார். புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கியக் கல்வித்துறை சார்ந்த அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில், சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள், சிபிஎஸ்இயின் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான நிஷ்தா பயிற்சித் திட்டம், வித்யாஞ்சலி இணையதளம் ஆகிய முக்கியக் கல்வித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்காக ஒலி மற்றும் எழுத்து இணைந்த சைகை மொழி காணாலிகள் தயாரிக்கப்பட்டு, இந்திய சைகை மொழி அகராதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல கண் பார்வையற்றவர்களுக்காக ஒலி மூலம் பேசும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுளன.

பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கல்விசார் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சிஎஸ்ஆர் நிதி வழங்குவோருக்காக வித்யாஞ்சலி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, ''எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்ல, சமத்துவத்துடனும் இருக்க வேண்டும். இதனால்தான் இந்தியாவில், கல்வியின் ஒரு பகுதியாக சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

ஷிக்‌ஷாக் பார்வ் கருத்தரங்கம் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE