ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்குத் திருக்குறள்: ஆன்லைனில் இலவசமாகக் கற்பிக்கும் தஞ்சாவூர் சிறுமி

By வி.சுந்தர்ராஜ்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இணையம் மூலம் திருக்குறள் கற்றுத் தருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி தேவஸ்ரீ.

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருகேயுள்ள கிட்டப்பா வட்டாரத்தைச் சேர்ந்த குணசேகரன் - சாந்தி தம்பதியின் மகள் தேவஸ்ரீ (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும்போது 1,330 குறள்களையும் முழுமையாகப் படித்து, ஒப்பித்தவர். தொடர்ந்து இரு ஆண்டுகளாகத் தனது வீட்டு வாசலில் திருக்குறள் பலகை அமைத்து, அதில் நாள்தோறும் திருக்குறளையும், அதற்கான பொருளையும் எழுதி வருகிறார்.

இது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பார்த்த ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளும் திருக்குறள் பயில தேவஸ்ரீயைத் தொடர்பு கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாள்தோறும் இணையம் மூலம் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார். இதில், 5 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட 13 பேர் திருக்குறள் கற்று வருகின்றனர். இதுவரை 34 அதிகாரங்களில் இருந்து 340 திருக்குறள்களைக் கற்றுத் தந்துள்ளார் தேவஸ்ரீ.

இதுகுறித்துச் சிறுமி தேவஸ்ரீ கூறும்போது, ''திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் வகையில் ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேன். நாள்தோறும் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் திருக்குறளைக் கற்றுத் தருகிறேன். இது, ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை. இதில், ஒவ்வொரு நாளும் 2 திருக்குறள் கற்றுத் தருகிறேன். சனிக்கிழமை மட்டும் வகுப்பு கிடையாது.

ஒரு வாரம் முழுவதும் நடத்தப்பட்ட 10 குறள்களும் ஞாயிற்றுக்கிழமை திருப்புதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பிழையின்றித் திருக்குறளை ஒப்பிக்கின்றனர். இந்தப் பணியைச் செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தேவஸ்ரீ தெரிவித்தார்.

இதுகுறித்து தேவஸ்ரீயின் தாய் சாந்தி கூறுகையில், ''நான் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இதனால் எனது மகளுக்கும் திருக்குறள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அவர் அனைத்துக் குறள்களையும் படித்து, அதில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதற்காகத் தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், சான்றிதழ்கள், கேடயங்களைப் பரிசாகப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் திருக்குறளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE