புதுவையில் பள்ளிகள் திறப்பு: கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் அனுமதி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து நடப்புக் கல்வியாண்டில் இன்று (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பரவலால் புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்புக் கல்வியாண்டில் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதையொட்டி மாணவர் வருகைக்காக பள்ளிகள் ஆகஸ்ட் 30-ம் தேதி திறக்கப்பட்டு, முன் ஏற்பாட்டுப் பணிகள் இரு நாட்கள் நடந்தன.

இன்று சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 வரை அரை நாள் மட்டுமே செயல்படும். 9, 11-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படும். அதேபோல் 10, 12-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயங்கும். அதன்படி இன்று 9, 11-ம் வகுப்புகள் காலையில் மட்டுமே இயங்கின. ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். நாளை 10, 12-ம் வகுப்புகள் இயங்க உள்ளன.

புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர், ''கரோனா தொற்றோ, அதற்கான அறிகுறியோ உள்ள மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது. அதேபோல் வீட்டில் யாருக்கேனும் தொற்றோ, அறிகுறியோ இருந்தாலும் அக்குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது. பள்ளிக்கு வந்த மாணவர்களில் இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பள்ளித் தரப்பு அழைத்துச் செல்ல வேண்டும்.

பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நுழையும் முன்பு கைகளைக் கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு தூய்மை செய்தே அனுமதிக்க வேண்டும். தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்த பிறகே அனுமதிக்க வேண்டும்'' என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மேற்குறிப்பிட்ட கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE