பள்ளிகளை ஆக்கிரமித்து தடுப்பூசி முகாம்?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

By செய்திப்பிரிவு

பள்ளிகளை ஆக்கிரமித்து தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''எந்தப் பள்ளியையும் ஆக்கிரமித்து தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கவில்லை. பள்ளியில் ஒரு பகுதியில் 10-க்கு 10 என்கிற அளவில் உள்ள இடத்தில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பள்ளியின் நிர்வாகத்திற்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால், அவை அகற்றப்படும். அதுபோல் எந்தப் பள்ளியிலும் இல்லை.

நாளை (செப்.1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்ற நிலையில், லயோலா கல்லூரியில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் வருகிறார்களா? என நாளை ஆய்வு செய்ய உள்ளோம். மறுநாள் கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரிக்கு வருகிற மாணவர்கள், பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்களா? என ஆய்வு செய்ய உள்ளோம். அங்கு தடுப்பூசி முகாம்களையும் ஏற்பாடு செய்ய உள்ளோம்.

கடந்த பத்து நாட்களாகத் தமிழகத்தில் 5 லட்சம் அளவுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதற்கு முன்பெல்லாம் 2 லட்சம், 3 லட்சம் அளவுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவதே கடினமாக இருந்த நிலையில், தற்போது தடுப்பூசிகள் தாராளமாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்களுக்கு முன்பு 5,77,000 அளவுக்கும், நேற்றைக்கு 5,78,000 அளவுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும் இந்த அளவைக் கூடுதலாக்குவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதைப் போல, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் தடுப்பூசி முகாம்களைக் கூடுதலாக்க அறிவுறுத்தியுள்ளோம்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE