அங்கன்வாடி மையங்களிலேயே சூடான உணவு; நகப்பூச்சுக்குத் தடை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

அங்கன்வாடி மையங்களிலேயே சூடான மதிய உணவு வழங்கப்படும், அங்கன்வாடிப்‌ பணியாளர்கள்‌ கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், நகப்பூச்சு போட்டிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட ஏராளமான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ளதை அடுத்து, அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''அங்கன்வாடி மையங்களில்‌ பதிவு செய்துள்ள 2 வயது முதல்‌ 6 வயதுக்குட்பட்ட முன்பருவக்கல்விக் குழந்தைகளுக்கு 01.09.2021 முதல்‌ சூடான சமைத்த மதிய உணவு மட்டும்‌ காலை 11.30 முதல்‌ மதியம்‌ 12.30 வரை அங்கன்வாடி மையத்திலேயே வழங்கப்படும்.

* அங்கன்வாடிப்‌ பணியாளர்கள்‌ அங்கன்வாடி மையத்தில்‌ நுழையும்போது தங்களது கைகளை வரையறுக்கப்பட்ட முறையில்‌ சோப்பு கொண்டு 40 நொடிகள்‌ கழுவி நன்றாகச் சுத்தம்‌ செய்ய வேண்டும்‌.

* கட்டாயமாக முகக்கவசத்தினைச் சரியான முறையில்‌ அணிந்தபின்னரே அங்கன்வாடிப்‌ பணியாளர்கள்‌ மையத்திற்குள்‌ நுழைய வேண்டும்‌.

* மையத்தினைச் சுத்தம்‌ செய்யும்போதும்‌, காய்கறிகளைக் கழுவி நறுக்கும்போதும்‌, சமைக்கும்போதும்‌, பரிமாறும்போதும்‌ கண்டிப்பாக முகக்‌கவசம்‌ உரிய முறையில்‌ அணிந்திருக்க வேண்டும்‌. மறு சுழற்சி மூலம்‌ பயன்படுத்தும்‌ முகக்‌கவசம்‌ எனில்‌ தினந்தோறும்‌ சோப்பு கொண்டு துவைத்திருக்க வேண்டும்‌.

* அங்கன்வாடி மைய வளாகங்கள்‌, சமையலறை, வைப்பறை, குடிநீர்த்‌ தொட்டி, மற்றும்‌ சமையலுக்குப் பயன்படுத்தப்படும்‌ பாத்திரங்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு உணவு வழங்கும்‌ தட்டு மற்றும்‌ டம்ளர்‌ ஆகியனவற்றை நன்கு தூய்மைப்படுத்தி, பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்‌ இருப்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்‌.

* அரிசி, பருப்பு, காய்கறிகள்‌ போன்ற சமையலுக்குப் பயன்படுத்தப்படும்‌ இதர பொருட்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்தி சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்‌. மேலும்‌, காலாவதியான மற்றும்‌ தரமற்ற‌ பொருட்களைச் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

* விரல்‌ நகங்களில்‌ நகப்பூச்சு மற்றும்‌ செயற்கை நகங்கள்‌ ஏதும்‌ பயன்படுத்தக்‌ கூடாது.

* அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும்‌ இரண்டு தவணையிலான கோவிட்‌-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்‌.

* மூக்கு சொறிதல்‌, தலை கோதுதல்‌, கண்கள்‌, காது மற்றும்‌ வாயினைத் தேய்த்தல்‌, விளாகத்தில்‌ எச்சில்‌ துப்புதல்‌ மற்றும்‌ மூக்கு சிந்துதல்‌ ஆகிய பழக்கங்களை முன்‌ உணர்வோடு அங்கன்வாடிப்‌ பணியாளர்கள்‌ தவிர்க்க வேண்டும்‌. அப்படி ஏதேனும்‌ தன்னிச்சையாகச் செய்தாலும்‌ உடனடியாக சோப்பு கொண்டு கை கழுவுதல்‌ வேண்டும்‌.

* அங்கன்வாடி மையத்தின்‌ அருகில்‌ குப்பைகள்‌, கழிவுநீர்‌, மற்றும்‌ சுற்றித் திரியும்‌ விலங்குகள்‌ இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்‌.

* மையத்திலேயே சூடான சமைத்த மதிய உணவு காலை 11.30 முதல்‌ மதியம்‌ 12.30 வரை வழங்கப்பட வேண்டும்‌ என்பதால்‌ அங்கன்வாடிப் பணியாளர்கள்‌ அதற்கு முன்னதாக உணவினைச் சமைத்து தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌.

* குழந்தைகள்‌ சாப்பிடும்‌ முன்னரும்‌ சாப்பிட்ட பின்னரும்‌ அவர்களின்‌ கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிட வேண்டும்‌. குழந்தைகளைச் சாப்பிட உட்கார வைக்கும்‌போது உரிய சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்றிட வேண்டும்‌. குழந்தைகளுக்கு வழங்கப்படும்‌ குடிநீரை நன்றாகக் காய்ச்சி வடிகட்டிய பின்னரே பயன்படுத்துதல்‌ வேண்டும்‌.

* எக்காரணத்தை முன்னிட்டும்‌ 01.09.2021 முதல்‌ மதிய உணவு உண்ணுவதற்கு தகுதியுடைய அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர்‌ உணவுப் பொருட்களோ அல்லது அதற்கு ஈடாக உணவு பாதுகாப்புத் தொகையோ வழங்கப்பட மாட்டாது''.

இவ்வாறு வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

மேலும்