கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்புத் தேர்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ திருப்பி அளிக்குமா என்று 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ வாரியம், 2020- 21ஆம் ஆண்டுக்கான 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது. இதற்கிடையே, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும், டெல்லி சிபிஎஸ்இ பள்ளியில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாயாருமான தீபா ஜோசப், அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''10, 12-ம் பொதுத் தேர்வுக்கான கட்டணமாக மாணவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சிபிஎஸ்இயால் வசூலிக்கப்பட்டுள்ளது. எனது மகளின் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக் கட்டணமாக 7 பாடங்களுக்கு ரூ.2,100-ஐச் செலுத்தி உள்ளேன். ஆனால், கரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 14-ம் தேதி ரத்து செய்யப்பட்டன. அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி ரத்து செய்யப்பட்டன. இவற்றுக்கான தேர்வு முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பெருந்தொற்றுக் காலத்தால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் கட்டணத் தொகையை சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு, மாணவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும். இதுகுறித்து உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிரதீக் ஜலான் கூறும்போது, ''தீபா ஜோசப்பின் மனுவைப் பரிசீலித்து சிபிஎஸ்இ முடிவெடுக்க வேண்டும். முடிவெடுப்பதில் மனுதாரர், சிபிஎஸ்இ என இரு தரப்பிடமும் முறையான காரணங்கள் இருக்க வேண்டும்.
10, 12-ம் வகுப்புத் தேர்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ திருப்பி அளிக்குமா என்று 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவால் நானுமே பயன்பெறுவேன். ஏனெனில் என்னுடைய மகனும் 12-ம் வகுப்பு படிக்கிறான்'' என்று தெரிவித்தார்.
தீபா ஜோசப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராபின் ராஜூ கூறும்போது, ''பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தத் தேவையான தேர்வு மையங்களை அமைக்கவோ, தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் ஊதியம் அளிக்கவோ வேண்டியதில்லை. இதனால் தேர்வுக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையையாவது திருப்பி வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
சிபிஎஸ்இ சார்பில் வழக்கறிஞர் ரூபேஷ் குமார் வாதாடும்போது, ''சிபிஎஸ்இ ஒரு சுயநிதி அமைப்பு. இதன் செலவுகளில் பெரும்பாலானவை பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கும் மாணவர்களிடம் பொதுத் தேர்வுக் கட்டணம் வசூலிப்பதற்கும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago