இரு சட்ட நூல்கள் எழுதி வெளியீடு: சட்டக்கல்லூரி மாணவி சாதனை

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூரில் பெண் உரிமை, அடிப்படைச் சட்டம் குறித்த இரண்டு சட்ட நூல்களை எழுதி வெளியிட்டு, சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி சாதனை படைத்துள்ளார்.

ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் - அரசுப்பள்ளி ஆசிரியர் சாந்தகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகள் சுவேதாஸ்ரீ.

இவர் பெங்களூரு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். 23 வயதாகும் இவர், மற்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில் தன்னுடைய இளம் வயதிலேயே ஆங்கில மொழியில் இரண்டு சட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்த இரண்டு நூல்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ராமதிலகம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.வி.சைலேந்திரகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர்.

சட்டப் புத்தகங்களின் வெளியீட்டு விழா, ஓசூர் காமராஜ் காலனி தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்பு சட்டக்கல்லூரி மாணவி சுவேதாஸ்ரீ எழுதிய 'ஏஞ்சல் ஆப் ஜஸ்டீஸ் -பேசிக் இன்ஃபர்மேஷன் ஆப் லா' (அடிப்படைச் சட்டம்) என்ற புத்தகத்தையும் மற்றும் 'ஏஞ்சல் ஆப் ஜஸ்டீஸ் - ரைட்ஸ் ஆஃப் விமன்' (பெண் உரிமை) ஆகிய இரண்டு சட்டநூல்களை வெளியிட்டார். இந்த இரண்டு சட்டநூல்களையும், ஓசூர் புத்தகத் திருவிழா குழுத் தலைவர் ஆர்.துரை மற்றும் வழக்கறிஞர் கோபால்ரெட்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் வாழ்த்துரை வழங்கி புத்தகத் திருவிழா குழுத் தலைவர் ஆர்.துரை பேசும்போது, ''பெண் உரிமைகளுக்கான சட்டங்கள் குறித்தும் அடிப்படைச் சட்டங்கள் குறித்தும் எளிய நடையில் அனைவரும் சட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் சுவேதாஸ்ரீ, இளம் வயதிலேயே திறமையுடன் இந்த இரண்டு சட்ட நூல்களை எழுதி உள்ளார். அவரின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன். ஓசூரில் இந்த மாதம் நடைபெற உள்ள 10-வது புத்தகத் திருவிழாவில் இரண்டு சட்ட நூல்களை எழுதியுள்ள இளம் எழுத்தாளர் சுவேதாஸ்ரீயைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி சுவேதாஸ்ரீ கூறும்போது, '' 'ஏஞ்சல் ஆப் ஜஸ்டீஸ்' - பெண் உரிமை சட்டப்புத்தகம், பெண்களுக்கான சட்ட உரிமைகளை விளக்கி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், 'ஏஞ்சல் ஆப் ஜஸ்டீஸ்' அடிப்படைத் தகவல் சட்டப்புத்தகம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையிலும் மிகவும் எளிய நடையில் எழுதியிருக்கிறேன்.

மாணவர்களுக்குப் பள்ளியிலேயே சட்டம் குறித்த பாடங்களைக் கற்பிக்க வேண்டும். இதனால் அனைவரும் சட்டங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு புத்தகங்களும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் பயன்படும் என்ற நம்பிக்கையில் எழுதி வெளியிட்டுள்ளேன். இந்த இரண்டு சட்டப்புத்தகங்களின் மூலமாகக் கிடைக்கும் தொகை முழுவதையும் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கொடுத்து விட முடிவு செய்துள்ளேன்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE