ஆகஸ்ட் 31 வரை 40% கட்டணம்; தனியார் பள்ளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

By க.சக்திவேல்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளும் நடப்பு கல்வியாண்டில், வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 40 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில், 2021-2022-ம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிப்பதாகவும், மாணவர்களின் பெற்றோரை அதிக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.

இது தொடர்பாக, 2020-2021-ம் கல்வியாண்டில், 2020 ஆகஸ்ட் 31 முடிய 40 சதவீத கல்வி கட்டணமும், அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 2021 பிப்ரவரி 29 முடிய 35 சதவீதம் என, 75 சதவீத கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலித்துக்கொள்ள நீதிமன்றத்தில் இடைக்கால தீர்ப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறை கடிதத்தில், 2021-2022-ம் ஆண்டுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 31 முடிய 40 சதவீதம் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலித்துக் கொள்ளவும், பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்கு 35 சதவீதம் வசூலித்துக் கொள்ளவும், மீதமுள்ள 25 சதவீதம் கல்விக் கட்டணம் குறித்து அப்போதுள்ள சூழ்நிலையை பொருத்து முடிவெடுக்கப்படும்.

புகார் அளிக்க தொலைபேசி எண்

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளும் 2021-2022-ம் கல்வியாண்டில் வரும் ஆகஸ்ட் 31 முடிய 40 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை தவிர்த்து காலணிகள், சீருடைகள், வாகனங்கள் போன்ற இதர கட்டணங்கள் ஏதும் வசூலிக்ககூடாது.

இது தொடர்பாக, புகார்கள் ஏதும் இருப்பின், பெற்றோர் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE