கரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவ அலுவலர் இரா.பீட்டர், 'இந்து தமிழ்' நாளிதழிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா முதல் அலையை ஒப்பிடும்போது 2-வது அலையில் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று கூடுதலாக இருந்தது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட அநேகக் குழந்தைகள், காய்ச்சல் மற்றும் சளி என்கின்ற அளவோடு குணமடைந்தனர். ஆனால், வெகுசில குழந்தைகள் மட்டும் எம்ஐஎஸ்சி எனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய சூழலும் உருவானது.
உலக சுகாதார நிறுவனம் மேற்கோண்ட ஆய்வுகளின்படி குழந்தைகள் 3-வது அலையின் தீவிரத்திலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தனி நபர் இடைவெளி, கை சுத்தம், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை குழந்தைகள் நேரடியாக செய்வதில் சிரமங்கள் உள்ளன. எனவே, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக் கவசம் அணியத் தேவையில்லை. குழந்தைகளுக்குச் செலுத்தக்கூடிய தடுப்பூசிகளும் பரிசோதனை முயற்சி என்ற அளவில்தான் மேற்கத்திய நாடுகளில் உள்ளது.
இந்தச் சூழலில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நோய்த்தொற்று வராமல் காக்கும் வழிமுறைகளை அதீத கவனத்துடன் மேற்கொள்வதும், நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் மட்டுமே குழந்தைகளை கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.
» பொம்மைகளை வீடியோ எடுத்துக் கற்பித்தல்: புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ஐசிடி தேசிய விருது
» முடியைச் சாப்பிட்ட பள்ளி மாணவி; விழுப்புரம் ஆட்சியருக்கு குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்
பிறந்த குழந்தைகளுக்கு கரோனா நோய்த்தொற்று வராமல் இருக்க தாய்ப்பால் கொடுக்கும் அனைத்து தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது மிகமிக அவசியம். தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு கரோனா நோய் பரவாது.
மாறாக, நோய்க்கு எதிரான அணுக்கள் குழந்தைக்குச் செல்லும். அதன் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு முகக் கவசம் அணிந்து கொள்ளவேண்டும். குழந்தைக்கு சத்தான ஆகாரங்களை கொடுப்பதும், அட்டவணையின்படி தடுப்பூசி போட்டுகொள்வதும் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். குழந்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் அழைத்துச்செல்லக்கூடாது.
கரோனா நோய்த்தொற்றுடைய குழந்தைகள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும், மிகச் சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படலாம்.
மூச்சுத் திணறல் இல்லாத குழந்தைகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் இருந்தாலோ, 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது குழந்தைகள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றாலோ அவர்களை உள் நோயாளியாக அனுமதித்து தேவையான சிகிச்சைகளைக் கொடுப்பது அவசியம்.
கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க அரிசிக் கஞ்சி, இளநீர், பழச்சாறு மற்றும் ஓஆர்எஸ் உப்புக்கரைசல் போன்றவற்றைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
எம்ஐஎஸ்- சி பாதிப்பு என்றால் என்ன?
கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிக அரிதாக எம்ஐஎஸ்-சி பாதிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அதீத சோர்வு , தொடர்ச்சியான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , தோலில் சிவப்பு தடிப்புகள் மற்றும் கண்கள் சிவந்திருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
சில சமயங்களில் இருதய பாதிப்பும, வலிப்பும் கூட ஏற்படலாம். இந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரியவர்ளைப் போலவே குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப்படுவர். நோய்த்தொற்று பற்றிய அச்சம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளோடு அமர்ந்து பேசி அவர்களிடம் உள்ள அச்சத்தைப் போக்க வேண்டும். முடிந்தவரை தொலைக்காட்சி, செல்போன் மற்றும் கணிணிப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். மேலும், குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மருத்துவ அலுவலர் இரா.பீட்டர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
8 hours ago
வெற்றிக் கொடி
8 hours ago
வெற்றிக் கொடி
8 hours ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago