பொம்மைகளை வீடியோ எடுத்துக் கற்பித்தல்: புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ஐசிடி தேசிய விருது

By செ. ஞானபிரகாஷ்

கற்பித்தலில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காகப் புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியை ரேவதிக்கு 2019-ம் ஆண்டுக்கான ஐசிடி தேசிய விருது கிடைத்துள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

தற்போது கரோனா காலம் என்பதால் நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர்.

அந்த வகையில் புதுச்சேரியில் ஐசிடி விருதினை பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ரேவதி 2019-ம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

இதுபற்றி ஆசிரியை ரேவதி கூறும்போது, ''பத்து ஆண்டுகளாக பொம்மைகளை உருவாக்கி 1 முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து வருகிறேன். பொம்மைகளைப் பராமரிப்பது கடினம். அதனால் கல்வித் துறையும், யூனிவர்செல் டீச்சர்ஸ் அகாடமியும் உருவாக்கிய பொம்மைகளை வீடியோவாக மாற்றி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கற்றுத் தந்தனர்.

அதைத் தொடர்ந்து வீடியோ எடிட்டிங், பொம்மை அனிமேஷன் ஆகியவற்றையும் உருவாக்கினோம். முக்கியமாக ஆங்கிலப் பாடத்துக்கும், பொது அறிவுக்கும் என 25-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அமைத்தோம். குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடம் எடுத்ததையடுத்து முன்பு ஐசிடி மேளாவில் பங்கேற்றேன். அதில், முதல் பரிசு கிடைத்தது.

இம்முறை ஐசிடி விருதுக்கு மாநிலக் கல்வித்துறை மூலம் பரிந்துரைக்கப்பட்டு விருதுக்குத் தேர்வாகியுள்ளேன். பாடக்கருத்தை வாய் மொழியில் கூறுவதுடன், வீடியோ காட்சியாக மாற்றி குழந்தைகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம், பாடம் அவர்களுக்குப் பசுமையாக மனதில் பதியும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE