கட்டண பாக்கியைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றினை நிறுத்திவைக்காதீர்: தனியார் பள்ளிகளுக்கு புதுவை கல்வித்துறை உத்தரவு

கல்விக் கட்டண பாக்கியைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழை நிறுத்தி வைக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாகப் பல தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். 7-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் சேர மாற்றுச் சான்று தேவையில்லை என்று கல்வித்துறை ஏற்கெனவே அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 7-ம் வகுப்புக்கு மேல் பலரும் கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச் சான்றினைத் தருவதில்லை என்று சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்குப் புது உத்தரவை அனுப்பியுள்ளார்.

அதில், கல்விக் கட்டண பாக்கியைச் சுட்டிக்காட்டி சில பள்ளிகள் மாற்றுச் சான்றினைத் தருவதில்லை என்ற புகார்கள் பெற்றோர்கள் மூலம் வருகின்றன.

கல்விக் கட்டண பாக்கிக்காக மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், நடத்தைச் சான்று ஆகியவற்றைப் பள்ளிகள் நிறுத்தி வைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. அதனால் கல்விக் கட்டண பாக்கிக்காக மாற்றுச்சான்றிதழை தனியார் பள்ளிகள் நிறுத்தி வைக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவு நகலையும் உத்தரவுடன் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE