பள்ளிகள் திறப்பு இல்லை; ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே: தெலங்கானா அறிவிப்பு

By பிடிஐ

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா சூழல் காரணமாகத் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனினும் கரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே தொற்றுப் பரவல் குறைந்து வரும் சூழலில், தெலங்கானா மாநிலம் முழு அளவில் தளர்வுகளை அறிவித்தது. அதன் முக்கியப் பகுதியாக கல்வி நிறுவனங்களைத் திறக்கும் அறிவிப்பையும் வெளியிட்டது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

அதன்படி தெலங்கானாவில் அனைத்து கல்வி நிலையங்களையும் ஜூலை 1-ம் தேதி முதல் திறக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

கல்வி நிலையங்களை மாணவர்கள் வருகைக்குத் தயார்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டதோடு, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தயார் செய்யுமாறு கல்வித் துறைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகளே தொடங்கும் என்று தெலங்கானா மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, ’’பெருந்தொற்றுக் காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலனுக்காக ஆன்லைனிலேயே வகுப்புகளைத் தொடங்க முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஜூலை 1-ம் தேதியில் இருந்து எல்கேஜி முதல் முதுகலைப் படிப்புகள் வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைனிலேயே கற்பித்தல் தொடங்கும்.

அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள ஆணையின்படி தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாதவாரியாக மட்டுமே கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்’’ என்று அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE