பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

By ஜெ.ஞானசேகர்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும் என, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் ஆகியவை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 603 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவையின் திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் ஆகியோர் இன்று (ஜூன் 27) நிவாரண உதவிகளை வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

"பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிது. மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.

கரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. 3-வது அலை வரும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிக்காட்டல்கள், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் ஆகியவற்றை பெற்று, முதல்வரின் ஆலோசனையைப் பெற்று, அதன்பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு சட்டப்பேரவையின் ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் எம்.பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE