தேசிய திறனாய்வு தேர்வில் ஆர்வம் காட்டும் அரசுப் பள்ளி மாணவர்கள்: தமிழகத்தில் மதுரை 6-வது இடத்தை பிடித்தது

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றால் 9, 10, 11, 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு அரசு கல்வி உதவித் தொகை கிடைக்கிறது என்பதால், இத்தேர்வு எழுத மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நடப்பாண்டு மதுரை மாவட்டம் இந்த தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் வரிசையில் மாநிலத்தில் 6 இடத்தை பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. "அப்ஜக்டிவ்" (கொள்குறி வகை வினா) முறையில் நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம்) பெற முடியும். அதனால் இத்தேர்வு எழுதுவதில் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது.

அதற்கான முன்னெடுப்பை ஆசிரியர்கள் மேற்கொண்டிருப்பதை கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர். இந்தாண்டு தமிழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 240 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றிப்பெற்றனர்.

இந்த ஆண்டு 269 பேர் வெற்றிப்பெற்றுள்ளனர். மாநிலத்தில் மதுரை மாவட்டம் இந்த தேர்தல் வெற்றிப்பெற்றோர் வரிசையில் 6வது இடத்தை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் பெரியபூலாம்பட்டி முத்துநாகையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி தாரணி தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இத்தேர்வில் இப்பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் வ.நாகரத்தினம் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் சக்திவேலின் மகளான மாணவி தாரணி கூறுகையில், “இப்பள்ளியில் முதல் வகுப்பில் இருந்தே ஆசிரியர்கள் பாடத்தை மட்டுமல்லாமல் இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர். ஆசிரியர்கள் ஊக்கத்தால்தான் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் செயல்படாமல் இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி ஆன்-லைன் மூலம் படித்து இம்மாணவி சாதனை படைத்திருப்பது அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE