அரசுப் பள்ளியில் சேர யூடியூப், ஆட்டோவில் பிரச்சாரம்: மதுரை ஆசிரியர்கள் அசத்தல்

By கி.மகாராஜன்

மதுரை கிழக்கு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேரவேண்டும் என்று வலியுறுத்தி, பள்ளியின் சிறப்புகள் அடங்கிய வீடியோவைத் தயாரித்து யூடியூபில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மதுரை யானைமலை, ஒத்தக்கடையில் நரசிங்கம் சாலையில் அமைந்திருக்கிறது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. யானைமலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது பள்ளி. சுகாதாரமான வளாகம், காற்றோட்டமான வகுப்பறைகள், மாணவர்கள், மாணவிகளுக்குத் தனித்தனிக் கழிப்பறைகள், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மேடையுடன் கூடிய காலை வழிபாட்டுக் கூடம் எனப் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

டிவி, டிவிடி வழியாகக் கற்பித்தல், தமிழ், ஆங்கில உச்சரிப்புகளை மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் நவீன தொழில்நுட்பம் நிறைந்த ஸ்மார்ட் வகுப்பறை, கணினி வழியே ஆன்லைன் தேர்வு எழுதும் வசதி, யோகா, சிலம்பம், இசைப் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

இந்தப் பள்ளியில் ஒன்று முதல் 5 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவில் சுமார் 500 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். பள்ளியின் சிறப்பால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், பெற்றோர்கள் ஆர்வத்துடன் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர்.

இதனிடையே மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவா மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து பள்ளியின் சிறப்புகளைத் தொகுத்து வீடியோ ஒன்றை தயாரித்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இப்பள்ளி ஆசிரியர் மோசஸ் தயாரித்துள்ள இந்த வீடியோ பொதுமக்களை அதிகம் கவர்ந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறித்து குரல் பதிவு மூலம் ஆட்டோ பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது.

இப்பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து வெளியேறும் மாணவ, மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் நாளில் யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளிக்கே நேரில் வந்து 6-ம் வகுப்பில் சேர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் வீடியோவைக் காண:


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE