சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பு ரத்து: பதிவாளர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு முதல் முழு நேர, பகுதி நேர எம்.பில். படிப்பு ரத்து செய்யப்படும் எனப் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) அனைத்து பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18-ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 2021- 22ஆம் கல்வியாண்டில் இருந்து முழு நேர மற்றும் பகுதி நேர எம்.பில். படிப்புகள் ரத்து செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சென்னைப் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இந்தக் கல்வியாண்டில் இருந்து எந்தவொரு கல்லூரியும் எம்.பில். சேர்க்கையை அனுமதிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது.

எனினும் முந்தைய ஆண்டுகளில் எம்.பில். படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் படிப்பை முடித்துக் கொள்ளலாம். எனினும் அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவில் படிப்பை முடிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பில். படிப்பு ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE