சிறு குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வி சரிவருமா?

By செய்திப்பிரிவு

பெருந்தொற்றுக் கால ஊரடங்கு பல வகைகளில் மக்களை பாதித்துள்ளது. அந்த வகையில் பள்ளிக் குழந்தைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் குறித்த பயம் பெற்றோர்களிடம் அதிகமாவதைக் காண முடிகிறது. அதிலும் தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களின் நிலை மிகவும் சிக்கலானதாக உள்ளது.

தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பது, இந்தச் சூழலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களைக் கல்வி கற்பிக்கப் பயன்படும் இடங்களாக மட்டும் கருதிவிட முடியாது. ஒரு குழந்தை இந்தச் சமுதாயத்தோடு பழகக் கற்கும் இடமும் அவைதான். இதுகுறித்துத் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினரும், கல்வி உளவியலாளருமான டாக்டர் சரண்யா ஜெய்குமார் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

"பள்ளிக் கல்வி என்பது ஒரு முழுமையான அனுபவத்தைக் குழந்தைகளுக்குத் தருகிறது. புத்தகப் பாடங்கள் வழியாகக் கற்றுக்கொள்வது மட்டுமில்லாமல், உளவியல் சார்ந்த திறமைகளைப் பள்ளியில்தான் குழந்தைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். தற்போதுள்ள சூழலில் பல நாட்களாக வழக்கமான வகுப்பறைக் கல்வி சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது. வழக்கமான கற்றல் முறையிலிருந்து இணையவழி வகுப்புகளுக்கான மாற்றம் என்பது இன்னும் முழுமையாக நடைபெறவில்லை.

சில கல்வி நிறுவனங்கள் வகுப்புகளைத் தொடங்காமல் வெறும் புத்தகங்களை மட்டுமே வழங்கி பெற்றோர்களைக் கற்பிக்கக் கூறும் நிலையும் உள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்குப் பெற்றோர் தனிக் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்கள் வாங்கிக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் வசதியுள்ள, குறைவான எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இந்த முறையில் கற்க முடிகிறது. அப்படிக் கற்கும் மாணவர்களாலும்கூட முழு ஈடுபாடு காட்ட முடிவதில்லை. இந்த ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகளின் கவனச் சிதறல் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவுள்ளது.

இணையவழி வகுப்புகள் பள்ளிக்கூட வகுப்பறைக் கற்றலுக்கு என்றுமே மாற்றாகாது. பல குழந்தைகள் வீடியோ, ஆடியோவை அணைத்து வைத்துவிட்டு சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகளை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கண்காணிப்பது கடினமாகியுள்ளது.

சரண்யா ஜெய்குமார்

வகுப்புகள் முடிந்த பின்பும் அந்த தொலைத்தொடர்பு சாதனங்களுடன் அவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். ஒரு குழந்தை அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் மட்டுமே இணையவழி வகுப்பில் செலவிட வேண்டும் என அமெரிக்க உளவியல் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இணையவழி வகுப்பு மட்டுமில்லாமல், அதன் பிறகும் கைப்பேசிகளைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் 'இணையவழிப் பொழுதுபோக்கு' அதிகமாகிறது.

இதனால் தூக்கமின்மை, மருட்சி, மொழியைக் கற்றுக்கொள்வதில் தாமதம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும். அதைத் தவிர்ப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது. உடல்நல ஆபத்துகள் குறித்துக் குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும்.

குழந்தைகள் மின்னணுக் கருவிகளில் செலவிடும் நேரத்தைப் பெற்றோர் திட்டவட்டமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், தொடர்ச்சியாக மின்னணுக் கருவிகளிலேயே நேரத்தைச் செலவிடுவதால் குழந்தைகள் சமூகத்தோடு, மக்களோடு பழகாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் உரிமைக் குழு இணையவழி வகுப்புகளுக்கு ஏற்றவாறு மாணவர், ஆசிரியர்களுக்கென்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. அது பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்படும். இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்குக் கூடுதல் தெளிவு கிடைக்கும்."

இவ்வாறு டாக்டர் சரண்யா ஜெய்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE