புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது: மாணவர் சேர்க்கை தேதிகள் வெளியீடு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடக்காததால் 9-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கை நடக்கும்.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 4,045 இடங்களும், கலைப் பாடப்பிரிவில் 2,305 இடங்களும், தொழில் பாடப்பிரிவில் 565 இடங்களும் என மொத்தம் 6,915 இடங்கள் உள்ளன. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2021- 22ஆம் ஆண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2018ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிகளின்படி இந்த மாணவர் சேர்க்கை நடப்பதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.

இதுபற்றிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு கூறும்போது, ’’கரோனா காரணமாக 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படாததால் 2019-20இல் நடைபெற்ற 9-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த ஆண்டு பிளஸ் 1 சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த சேர்க்கைக்காக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் 10ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியலைத் தயார் செய்து சேர்க்கையை நடத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். விண்ணப்பங்களைப் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வரும் ஜூலை 12ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 14ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சேர்க்கை நடைபெறும். ஜூலை 19ஆம் தேதி காலியிட விவரம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 21ஆம் தேதி அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குச் சேர்க்கை நடைபெறும்.

ஜூலை 22ஆம் தேதி காலியிட விவரம் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும். ஜூலை 23ஆம் தேதி தனியார் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். அவற்றில் ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும். ஒரு பள்ளியில் 50 இடங்கள் இருந்து, அதிகமானோர் விண்ணப்பித்தால் பத்து சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்" என ருத்ரகவுடு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE