நீட் தேர்வு செப்டம்பருக்குத் தள்ளிப்போக வாய்ப்பு: ஆகஸ்டில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் 

By பிடிஐ

ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகள் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ நடத்தப்படும் என்றும், நீட் தேர்வுகள் செப்டம்பர் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்தது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். தினந்தோறும் 3 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன. சிஐஎஸ்சிஇ வாரியமும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்தது. முதுகலை நீட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அதேபோல ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. நுழைவுத்தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும், தேர்வு நடத்தப்படுவதற்கு 15 நாட்கள் முன்பாகத் தேதிகள் அறிவிக்கப்படும் என தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் 4 முறை ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாணவர் 4 தேர்வுகளையும் எழுதலாம். அதில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல ஜூலை 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத்தேர்வு குறித்து அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதற்காக மே 1-ம் தேதி தொடங்கப்பட வேண்டியிருந்த முன்பதிவும் தொடங்கப்படவில்லை. மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (சியுசெட்) குறித்தும் மத்திய அமைச்சகம் இதுவரை எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரம் கூறும்போது, ''மீதமுள்ள இரண்டு ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வுகள் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ 15 நாட்கள் இடைவெளியில் நடத்தப்படும். நீட் தேர்வுகள் செப்டம்பர் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்புண்டு.

எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகமே இறுதி முடிவை எடுக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா சூழல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE