சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து; மதிப்பெண் கணக்கீட்டுக்கு எதிரான மனுக்கள்- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் மதிப்பெண் கணக்கீட்டுக்கு முறைக்கு எதிராகவும் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, பல்வேறு கல்வி வாரியங்களும் சிபிஎஸ்இ மாணவர்களும் பெற்றோர்களும் பொதுத் தேர்வு ரத்து செய்யபட்டதை எதிர்த்தும் மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதில் நீதிபதிகள் கூறும்போது, பல்வேறு தரப்பில் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்களின் மதிப்பெண் கணக்கீட்டு முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். அத்துடன் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE