நீட் தேர்வு தேவையா, இல்லையா?- மக்கள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்தும், தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றியும் மக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க நாளை (ஜூன் 23) கடைசித் தேதி ஆகும்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், நீட் தேர்வு முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்துள்ளது.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய 9 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஜூன் 10 அன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து மக்கள் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகக் கருத்து தெரிவிக்கலாம் என்று குழு அண்மையில் அறிவித்தது. இந்தக் கருத்துகளைத் தெரிவிக்க நாளை (ஜூன் 23) கடைசித் தேதி ஆகும்.

இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமான தரவுகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளதாகவும், மக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளில் நீட் தேர்வு வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் இருவேறு கருத்துகள் கலவையாக வந்துள்ளதாகவும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE