நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்து மாணவர்களையும் பெற்றோர்களையும் மன அழுத்தத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் காந்திய மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''மாணவர்களும், பெற்றோர்களும் மீண்டும் பதற்றத்தில் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என இப்போதைய முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல, கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கடந்த இரண்டாண்டுகளாக மட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரத்திலும் உறுதியளித்து வந்தார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், பிரதமரிடம் கோரிக்கை வைப்பது, பாதகங்களை ஆராயக் குழு அமைப்பது என்று நாட்கள் கடத்தப்படுகின்றன.
இன்னும் ஒருபடி மேலே போய், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ' 2010-ல், அதாவது மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் இருந்தபோதுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது' என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். மேலும் 'நீட் தேர்வுக்குத் தடை விதிக்கப்படாததால், பயிற்சி வகுப்புகள் தொடரும்; மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நீட் தவிர்க்க முடியாதது என்ற கள நிலவரத்தைப் புரிந்துகொண்ட அமைச்சருக்கு, காந்திய மக்கள் இயக்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா என்று ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்தும் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியம். நீட் தேர்வு வேண்டாம் என்பது நம் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அது திணிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுகிறது. 2016ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்றதுபோல இப்போதும் பெற இந்த அரசால் இயலுமா? என்றால் முடியாது என்றே தோன்றுகிறது.
அடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களின் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே, மக்கள் போராட்டத்தின் நெருக்கடியில் மத்திய அரசும், நீதிமன்றமும் இறங்கி வர வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு இப்போதைய அரசு இணங்கி வருவதற்கு சாத்தியமில்லை. இந்த நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் நம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. கரோனா வரக்கூடாது என விரும்புகிறோம். வந்துவிட்டால் என்ன செய்வது? அதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நீட் தேர்வையும் அந்த இடத்தில் நிறுத்திப் பார்ப்பதே நிதர்சனமாகும். எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
அரசு நடத்தும் பொதுப் பள்ளிகளில் முறையாக வகுப்புகள் நடைபெறாத நிலையில், அந்த மாணவர்கள் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. நீட் தேர்வுக்கு என்று தனிப் பயிற்சிக் கல்லூரிகளில் சேர்ந்து அதிகக் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற முடியாதவர்கள் நிலைமை என்னவாகும் என்பது மற்றொரு கேள்வி.
இணையவழி வகுப்புகள் முறையாக நடப்பதற்கான கட்டமைப்புகள், வசதியற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய இணைப்பு வசதிகள், திறன் கைப்பேசிகள் வழங்குதல் போன்றவை நடைபெற வேண்டும்; தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு இணையான தரத்தில் அரசின் பயிற்சிகள் இருக்க வேண்டும். இதற்கு ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் அவசியம். முந்தைய அரசு ஒதுக்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர வேண்டும்; தேவையெனில் அதிகரிப்பது பற்றியும் அரசு யோசிக்கலாம்.
கல்வி கற்பித்தலுக்கான கட்டமைப்பை, மாநிலம் முழுவதும் சீர்படுத்துவதும், வலுப்படுத்துவதும் அவசர அவசியம். பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இவற்றையெல்லாம் தமிழக அரசு கருத்தில் கொண்டு விரைந்து செயலாற்ற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
இந்தியாவில் மொத்தம் 65,000 எம்பிபிஎஸ் இடங்கள்தான் உள்ளன. ஆனால், ஒவ்வொரு வருடமும் 14 லட்சம் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 8,000 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களும், 2,873 பல் மருத்துவப் படிப்பு இடங்களும் உள்ளன. முறையாகப் பயிற்சி பெற்று, அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு, தேர்வை எதிர்கொண்டால் நம் மாநிலத்தில் இருக்கும் இடங்களைத் தாண்டி அதிக இடங்களை நம் மாணவர்கள் பிடிப்பார்கள். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
காந்திய மக்கள் இயக்கம் தெளிவாகச் சொல்வது என்னவென்றால் நீட் நுழைவுத் தேர்வினை அரசியலாக்காதீர்கள். இது லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வாழ்வோடு சம்பந்தப்பட்டது. தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோரது விருப்பம். திணிக்கப்படும் பட்சத்தில் நம் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. அதனை அவர்கள் செவ்வனே செய்ய வேண்டும். மாணவர்களையும் பெற்றோர்களையும் மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago