அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிப்பது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என, தமிழக முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்படும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என இந்திய பிரதமரே அறிவித்துள்ள சூழ்நிலையில், இதனையொட்டி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என்று அறிவித்துள்ள நிலையில், நீட் பயிற்சியை தொடர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதையும், அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த முடிவைத்தான் தமிழக அரசும் எடுத்திருக்கிறது என்று தெரிவித்து, இதன் அடிப்படையில்தான் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறியிருந்தார்.
இந்த முடிவு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், மாணவர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்தும் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் எந்தக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதோ, அந்தக் காரணங்கள் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்து, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்திய முதல்வர், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தார்.
நீட் உட்பட உயர் கல்விச் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் உறுதியான நிலைப்பாடு. இதனை வலியுறுத்தி நானும் பிரதமருக்கு கடிதங்களை எழுதியுள்ளேன்.
இந்தச் சூழ்நிலையில், நீட் பயிற்சியை தொடர கல்வி துறை உத்தரவிட்டு இருப்பதாகவும், அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் தொடங்கி உள்ளதாகவும், செய்தி வெளியாகியுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டதோ, அந்தக் காரணம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தையொட்டி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளே ரத்து செய்யப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், நீட் தேர்வு நடத்தப்படுவது என்பது மாணவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் குந்தகம் விளைவிக்கும்.
இப்பொழுது அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை நடத்துவதன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசே நினைக்கிறதோ என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.
கரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் பயிற்சி பெறக்கூடிய நிலையில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர் மனநிலை இருக்கிறதா, அதற்கான வசதிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறிதாக உள்ளது.
தற்போதைய சூழலில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை சந்திப்பது என்பது மாணவ, மாணவியருக்கு, குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு மிகப்பெரிய சவால்.
எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்து உயர் கல்விக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும், இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவ, மாணவியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago