கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி; ரூ.5 லட்சம் வைப்பீடு நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் பட்டப் படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29-5-2021) தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், முதல்வர் கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்:

* கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகையை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிட வேண்டும்.

* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

* இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

* கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

* ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

* மாவட்டந்தோறும் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவை கண்காணிக்கப்படும்.

* அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று, சமூக நலத் துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சிறப்புச் சலுகைகளை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்