பாலியல் புகார்; யார் தவறு செய்தாலும் முதல்வர் விடமாட்டார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி

ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாகப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, யார் தவறு செய்தாலும் முதல்வர் ஸ்டாலின் விடமாட்டார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இடும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில், மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தடுப்பூசி செலுத்திக் கொள்வதே கரோனாவில் இருந்து நம்மை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி இடப்பட்டு வருகிறது.

சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இன்றுகூட ஒரு பள்ளி மீது புகார் வந்தது, அந்தப் பள்ளியிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று முதல்வர் அறிவித்துள்ளார். யார் தவறு செய்தாலும் முதல்வர் விடமாட்டார்.

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு அந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விசாகா குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அப்போது, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE