முன்னாள் குடியரசுத் தலைவர்அப்துல் கலாமின் இளம் விஞ்ஞானிக்கான கலாம் விருது விழுப்புரம் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரைத் தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் முகமது சாகுல் அமீது. இவர் பொறியியல் படித்துள்ளார். இவருக்கு 2020ம் ஆண்டுக்கான பெஸ்ட் அச்சீவர்ஸ் என கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் இளம் விஞ்ஞானிக்கான கலாம் விருது அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முகமது சாகுல் அமீது கூறும்போது, ''நான் ஏற்கனவே மொபைல் இல்லாமல் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காகக் கைகளில் அணியும் பட்டை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த பட்டையில் உள்ள பொத்தானை ஆபத்துக் காலங்களில் அழுத்தினால், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை, பெற்றோர் அல்லது காப்பாளர் எண்ணுக்கு அழைப்பு செல்லும். மேலும் கூகுள் மேப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் அப்பெண்ணின் லொக்கேஷனைக் காணமுடியும்.
இதேபோல இருசக்கர வாகனங்களுக்கு விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தின் அனைத்து விவரங்களும் அருகில் உள்ள காவல்துறைக்குச் செல்லும், மேலும் ஹிட்அன்ரன் போலத் தப்பிச்செல்லாத வகையில் வாகனத்தின் கியர் லாக் ஆகிவிடும், அதில் உள்ள கேமரா மூலம் வாகனத்தில் நம்பர் பிளேட் புகைப்படம் காவல்துறைக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கண்டுபிடிப்பு
கரோனா தொற்றாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருவதால், அதனைத் தவிர்க்க பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து, அதை வைஃபையுடன் இணைத்துள்ளேன். இந்த காரில் உள்ள தட்டில் மருந்து, உணவுகளைத் தொற்றாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதில் உள்ள கேமரா மூலம் மருத்துவர்கள் தொற்றாளர்களிடம் உரையாடலாம். அவர்களைக் காணலாம்.
இதனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்படும் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். இதற்காக கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் 14ம் தேதி இளம் விஞ்ஞானிக்கான கலாம் விருதை வழங்கியுள்ளது. இவ்விருதை இரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்தும், பாராட்டும் பெற்றேன்'' என்று முகமது சாகுல் அமீது தெரிவித்தார்.